மதுரை கோரிபாளையத்தில் இணைப்பு பாலப் பணிகளை முடக்காமல் புதிய மேம்பாலம் அவசர கதியில் திறக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மதுரை கோரிபாளையத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் தமுக்கத்தில் இருந்து நெல்பேட்டை அண்ணா சிலை வரை மேம்பாலமும், கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே இடதுபுறமாக செல்ல மேம்பாலத்திலேயே இணைப்பு பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டது.
இவற்றில், தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை 213 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலத்தை கடந்த 21ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஆனால், இந்த பாலத்துடன் திட்டமிடப்பட்ட செல்லூர் இணைப்பு பாலம், அரைகுறையாக பாதியிலேயே நிற்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இணைப்பு பாலம் திறக்கப்படாததால் செல்லூர் பந்தல்குடி கால்வாய் வழியாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். செல்லூர் இணைப்பு பாலம் பணிகளை விரைவுப்படுத்தி, சித்திரைத் திருவிழாவுக்கு முன்பாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















