ராமநாதபுரத்தில் கருப்பசாமி வேடமணிந்து அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் விளக்கிய திமுக நிர்வாகி மீது இந்து முன்னணி சார்பில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகேயுள்ள பள்ளப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். திமுக நிர்வாகியான இவர் கருப்பசாமி வேடமணிந்து. தாதனேந்தல் கிராமத்தில் உள்ள மக்களை சந்தித்துள்ளார்.
அப்போது அவர்களிடம் மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், இலவச பேருந்து திட்டம், மீனவர்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட அரசின் பல நலத்திட்டங்களை அவர் விளக்கியுள்ளார். தொடர்ந்து அந்த திட்டங்களால் பயனடைந்தவர்களை அழைத்து, கருப்பசாமி “குறி கேட்பது” போன்ற பாவனையில் பிரசாரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, திமுக நிர்வாகி தெய்வத்தின் வேடமிட்டு அரசியல் பரப்புரை செய்தது, இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இதில் தொடர்புடைய திமுக நிர்வாகி ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருப்புல்லாணி காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
















