போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக CIA-வைத் தொடர்பு கொண்டு ஈரான் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அதை ஈரான் அரசு மறுத்துள்ளது. அதே நேரத்தில் ஈரானுடன் இனி எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை என்று அதிபர் ட்ரம்ப் உறுதிப்பட தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் ஈரானும் பதிலடியாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்திவருகிறது.
இந்நிலையில் போர் தொடங்கிய முதல் நாளே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஈரான் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளிவந்தன.
ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி, ஓமன் அமைதிப் பேச்சுவார்த்தை குழுவினர் மூலம் அமெரிக்காவுடன் மீண்டும் அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தொடங்க புதிய முயற்சியை மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.
ஈரானின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட மறுநாளே பேச்சுவார்த்தை நடத்த ஈரான் கோரிக்கை வைத்திருப்பதாக கூறிய அதிபர் ட்ரம்ப், இதை முதலிலேயே செய்திருக்க வேண்டும் என்றும், ஆனால் ஈரான் அதிக காலம் கடத்தி விட்டனர் என்றும் தெரிவித்திருந்தார்.
போர் எப்போது முடியும் என்று தெரியாத நிலையில் ஈரானின் உயிர் பிழைத்த தலைவர்கள், தங்கள் நாட்டின் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர ஆசைப்படுகிறார்கள்.
எனவே ஈரானின் உளவுத்துறை அமைச்சகத்தின் இரகசிய அதிகாரிகள் மூலம், பேச்சுவார்த்தைக்கு ஒரு வாய்ப்பை வழங்குமாறு C.I.A.-ஐ மறைமுகமாகத் தொடர்பு கொண்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதை “பொய்” என்றும், இந்தத் தகவலை போருக்கு நடுவே ஒரு உளவியல் போர் என்றும் ஈரான் உளவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடந்து வரும் போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவது மற்றும் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஈரான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அமெரிக்காவைத் தொடர்பு கொள்ளவில்லை என்று ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் அலி பஹ்ரைனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
இதனிடையே ஈரானுடன் ரகசிய பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா நடத்துகிறதா என்று ட்ரம்ப் அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரிடையாகவே கேட்டதாகவும் அதற்கு, ஈரானுடன் மறைமுகமாகவும் பேசவில்லை என்று வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
தனது அனைத்து போர் நோக்கங்களும் நிறைவேறுவதற்கு முன்பே போர் நிறுத்தம் இல்லை என்பதில் உறுதியாக இருக்கும் இஸ்ரேல், அதை அடைவதை நோக்கி வேகமாக முன்னேறுகிறது என்றே சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
















