ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஈரானின் 42 கடற்படைக் கப்பல்களை அழித்துள்ளதாகவும், இதில் சில மிகப்பெரிய கப்பல்களும் அடங்கும் எனவும் தெரிவித்தார்.
இதன் மூலம், ஈரானின் கடற்படைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளதாகவும், ஈரானின் விமானப் படை மற்றும் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு வசதிகளும் அமெரிக்காவால் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
அவர்கள் இனி எப்படித் தொடர்பு கொள்வார்கள் என்று தெரியவில்லை எனவும், அவர்களே அதைக் கண்டுபிடித்துக் கொள்ளட்டும் எனவும் டிரம்ப் விமர்சித்தார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கு மிக நெருக்கமான நிலையை எட்டியபோது, அமெரிக்காவின் ‘மிட்நைட் ஹேமர்’ மற்றும் பி-2 ரக போர் விமானத் தாக்குதல்கள் அந்த முயற்சியை முற்றிலுமாக முறியடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எங்களின் கடும் தாக்குதலால் ஈரான் நிலைகுலைந்துள்ளது என்றும், அதனால் தான் மேற்காசிய நாடுகளை தாக்க மாட்டோம் என ஈரான் வருத்தம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.
எங்களுடைய நோக்கம் இன்னும் முழுமையாக முடியவில்லை எனறும், அடுத்தக் கட்ட நடவடிக்கைகளில், மேலும் பல தலைகள் உருளும் என்றும் அவர் கூறினார். எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், ஈரானை அழிப்பதுதான் இலக்கு என்றும் ட்ரம்ப் உறுதிபட தெரிவித்தார்.
















