கோவையில் திருமணம் தாண்டிய உறவு தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், கணவர் கடத்தப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சுல்தான்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் குமார் என்பவருக்கும், குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே, உறவினரான முருகன் என்பவருடன் பெண்ணுக்கு திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்ட நிலையில், சமீபத்தில் இந்த விவகாரம் சதீஷ் குமாருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் குடும்பத்தினுள் பிரச்னை ஏற்பட்ட நிலையில், கடந்த 3-ம் தேதி குழந்தைகளை காணச்சென்ற சதீஷ் குமாரை காணவில்லை என போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, சதீஷ் குமாரை முருகன் உட்பட 4 பேர் காரில் கடத்திச் சென்று தாக்கியது தெரியவந்தது.
சதீஷ் குமாரை பீர் பாட்டிலால் தலையில் அடித்து கொலை செய்த அவர்கள், அங்குள்ள பிஏபி வாய்க்காலில் உடலை வீசிவிட்டு தப்பிச் சென்றதும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து வாய்க்காலில் இருந்து சடலத்தை மீட்ட போலீசார், கொலையில் தொடர்புடைய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















