ஈரான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த 10 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் ஈரான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதனால் கோபடைந்த ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதால், 4 ஆண்டுகளில் இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வந்தாலும், எண்ணெய் வளங்கள் மீதான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல் அமெரிக்காவை அதிருப்தி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ராணுவ இலக்குகளை மட்டுமே தாக்குவதாக இஸ்ரேல் தெரிவித்திருந்த நிலையில், பொருளாதார கட்டமைப்புகளை இவ்வளவு பெரிய அளவில் அழித்தது அமெரிக்காவை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த மார்ச் 10ம் தேதி செல்லவிருந்த அமெரிக்க குழுவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
















