பேச வாய்ப்பு வரும்போது ஜெர்மனியிலும், இங்கிலாந்திலும் இருந்து விட்டு பின்னர் பேச அனுமதிக்கவில்லை என ராகுல்காந்தி புகார் கூறுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.
மக்களவையில் சபாநாயகர் பதவியில் இருந்து ஓம் பிர்லாவை நீக்க கோரி தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, அவையில் இருந்த எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். எனினும், அவையில் இருந்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கைகளை உயர்த்தி நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோல்வியடைய செய்தனர்.
அப்போது அவையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பேச விடுவதில்லை என எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர். இதில் குறுக்கிட்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தான் பேச அனுமதிக்கப்படுவதில்லை என்றும், தனது குரல் ஒடுக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்புவதாக கூறினார்.
அவையில் பேச வேண்டிய நேரத்தில் ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் இருந்து விட்டு, பிறகு வந்து பேச விடவில்லை எனப் புகார் கூறுவதாகவும் குற்றஞ்சாட்டினார். 18-வது மக்களவைக்கான தரவில், காங்கிரஸ் எம்.பி.க்கள் மொத்தம் 157 மணிநேரம் மற்றும் 55 நிமிடங்கள் பேசியுள்ளதாகவும், அந்த வாய்ப்புகளை ஏன் பயன்படுத்தி கொள்ளவில்லை? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும்,பொய் தகவல்களை பரப்பி மக்களவையின் நற்பெயரை குலைக்க வேண்டாம் எனவும் கண்டனம் தெரிவித்தார்.
















