போலீசார் தனது காலை இரும்பு கம்பியை வைத்து அடித்து உடைத்ததாக உயிரிழந்த விசாரணை கைதி ஆகாஷ் நீதிபதியிடம் வழங்கிய வாக்குமூலம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதில், தன்னையும் தனது நண்பர் குணாவையும் சீருடை இல்லாத 10 காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி சென்றதாகவும், வெள்ளை துணியால் கண்களை கட்டி தனது நண்பர் குணாவை ஒரு காரிலும், தன்னை மற்றொரு காரிலும் ஏற்றிச் சென்றதாகவும் கூறியுள்ளார்.
பின்னர், சிவகங்கை செல்லும் சாலையில் ஒரு இடத்தில் தன்னை இறக்கி தரையில் அமர வைத்ததாகவும், தனது காலுக்கு கீழ் 2 கற்களை வைத்த காவல்துறையினர், ஈரசாக்கை போட்டு போர்த்தி இரும்பு கம்பியை கொண்டு காலில் பலமாக அடித்ததாகவும் கூறியுள்ளார்.
கால் எலும்பு முறிந்து ரத்தம் வெளியேறிதாகவும், கண்ணை கட்டி இருந்ததால், யார் அடித்தார்கள் என்று தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது, மருத்துவரிடம் பாலத்தில் இருந்து கீழே விழுந்து விட்டதாக சொல்லுமாறு காவல்துறையினர் மிரட்டியதாகவும் ஆகாஷ் கூறியுள்ளார்.
















