ஈரான் பெண்களின் உரிமைகளுக்காக உருகுவே நாடாளுமன்றத்தில் புர்கா அணிந்து வந்து தனது எதிர்ப்பை நாடாளுமன்ற உறுப்பினர் அட்ரியானா பெனா வெளிப்படுத்தினார்.
ஈரானில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் பொது இடங்களில் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும் என்ற சட்டம் உள்ளது. இதை மீறுபவர்கள் மீது வன்முறை, கைது மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
திருமணம், விவாகரத்து, மற்றும் வாரிசுரிமை விவகாரங்களில் ஈரான் பெண்களுக்கு எதிரான சட்டங்கள் உள்ளன. ஈரானில் பெண்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் மீது தடைகள் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் ஈரான் பெண்களுக்கு குரல் கொடுக்கும் வகையில் உருகுவே நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் அட்ரியானா பெனா நூதன போராட்டத்தை மேற்கொண்டார். உருகுவே நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, அவர் உடல் முழுவதும் மூடியிருக்கும் கருப்பு நிற புர்காவை அணிந்து வந்து அமர்ந்தார்.
இது அங்கிருந்த மற்ற உறுப்பினர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. ஈரானில் பெண்கள் மீதான கடுமையான ஆடைக்கட்டுப்பாடுகள் மற்றும் மனித உரிமை மீறல்களை உலக நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு வரும் நோக்கில் அவர் இந்த நூதனப் போராட்டத்தை மேற்கொண்டார்.
இந்தச் செயல், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் பெண்களுக்கான ஆடை சுதந்திரம் குறித்த உலகளாவிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.
















