திருநீர்மலை, வடபழனி உள்ளிட்ட கோயில்களுக்கு சொந்தமான சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக்கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலை பகுதியில் உள்ள ரங்கநாத பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான 1050 ஏக்கர் நிலங்கள் இருந்தற்கான வருவாய் ஆவணங்கள் உள்ளன.
அத்தகைய வருவாய் ஆவணங்களை திருத்தி ஆக்கிரமிப்பாளர்கள் சட்ட விரோத செயலில் ஈடுபட்டதால், தற்போது அக்கோயிலுக்கு சொந்தமாக 157 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயில் நிலத்தை மீட்கக்கோரியும் சந்தானம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி சுரேந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பலமுறை புகார் மனு அளித்தும் அறநிலையத்துறை இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று
மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.
















