சென்னை வியாசர்பாடி பிவி காலனியைச் சேர்ந்த ரவுடி கணேசன் மீது கொலை, கொள்ளை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்தாண்டு துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ரவுடி கணேசன், ஜாமினில் வெளிவந்த பின்னரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நிலுவையில் உள்ள வழக்கில் ரவுடி கணேசனை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் மாதவரம் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், அவரை கைது செய்ய சென்றபோது கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், ரவுடி கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
















