இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் ஆராய்ச்சியாளர் தேவேந்திர சிங் சாப்லோட், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ்AI நிறுவனங்களில் இணைந்து, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் பணியாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…
உலகளவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் துறைகள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், இந்தியாவில் கல்வி பயின்ற பல ஆராய்ச்சியாளர்கள் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். குறிப்பாக மனிதர்களைப் போன்ற சிந்தனை திறன் கொண்ட அதிநவீன நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்கும் முயற்சியில் பல உலக நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், இந்திய வேர்களைக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் அந்த முன்னேற்றத்தின் முக்கிய அங்கமாக மாறி வருகின்றனர்.
அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் ஆராய்ச்சியாளரான தேவேந்திர சிங் சாப்லோட்டும், தனது தொழில் சார்ந்த வாழ்க்கையில் முக்கிய முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி, IIT BOMBAY முன்னாள் மாணவரான தேவேந்திர சிங், தற்போது ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் AI நிறுவனங்களில் இணைந்துள்ளதாகவும், வருங்காலத்தில் எலான் மஸ்குடன் இணைந்து மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் பணியாற்ற உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தேவேந்திர சிங், உடலியல் உலகமும், டிஜிட்டல் உலகமும் இணையும் வகையில், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து திறமையான அமைப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “SUPER INTELLIGENCE” எனப்படும் மிக உயர்ந்த செயற்கை நுண்ணறிவு திறன்களை உருவாக்கும் முயற்சியில் நேரடியாக ஈடுபட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் AI இணைந்து செயல்படுவதன் மூலம், உடலியல் மற்றும் டிஜிட்டல் நுண்ணறிவை ஒருங்கிணைக்கும் புதிய முன்னேற்றங்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது தொழில் வாழ்க்கையில் பல ஆண்டுகளாக ஆர்வத்துடன் ஆராய்ந்து வந்த ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளுடன், தற்போதைய புதிய பணியிடம் முழுமையாக பொருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, தேவேந்திர சிங்-ஐ வரவேற்கும் விதமாக பதிவிட்டுள்ள எலான் மஸ்க், அவரது பதிவை பகிர்ந்து “எக்ஸ் AI-க்கு வரவேற்கிறோம்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2010-ம் ஆண்டு நடந்த ஐஐடி-ஜேஇஇ தேர்வில் 25-வது இடத்தை பெற்ற தேவேந்திர சிங், அதன் மூலம் IIT BOMBAY-ல் கல்வி பயின்றார். சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் 5-வது இடத்தை பெற்ற இவருக்கு, உலகளாவிய செயற்கை நுண்ணறிவு போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளை வழிநடத்திய அனுபவமும் உண்டு.
CVPR-2019 PointNav Challenge, CVPR-2020 ObjectNav Challenge, NeurIPS-2022 Rearrangement Habitat Challenge மற்றும் Visual-Doom AI Competition போன்ற போட்டிகளில், இவரது தலைமையிலான அணி சிறந்த சாதனைகளை படைத்தது. பின்னர் அமெரிக்காவில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் பயின்ற தேவேந்திர சிங், அங்கு MACHINE LEARNING துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
இதற்கு முன் மிஸ்ட்ரல் AI நிறுவனத்தின் தொடக்கக் குழுவில் பணியாற்றி வந்த தேவேந்திர சிங் சாப்லோட், முகநூலின் AI ஆராய்ச்சி நிறுவனத்திலும் ஆராய்ச்சியாளராக பணி புரிந்துள்ளார். இந்நிலையில், இந்த புதிய பணியின் மூலம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் துறைகளில், முக்கிய முன்னேற்றங்களை உருவாக்கும் முயற்சியில் அவர் தற்போது தனது புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.
















