நத்தம் அருகே தனியார் கல்குவாரியில் இளைஞர் சடலம் கிடந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, 10 நாட்களாக காணாமல் தேடப்பட்டு வந்த கருப்பசாமி என்ற இளைஞர் உடல், அந்தப் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில், பத்து அடி ஆழத்தில் இருந்து, அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சில நாட்கள் முன்பு, இளைஞர் கருப்பசாமியைத் தேடி, இந்தக் குவாரியில் விசாரித்தபோது, அவர் அங்கு வரவில்லை என்று கூறியதாகத் தெரிகிறது. இந்தக் குவாரி, ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்குத் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தப் பழனியாண்டி, ஊடகவியலாளர்களையே கடத்தி தாக்குதல் நடத்திய காணொளி வெளியாகியிருந்தது. ஆனால், திமுக எம்எல்ஏ என்பதால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, ஒரு இளைஞர் உயிர் பறி போகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது விபத்தா அல்லது கொலையா என்பது குறித்த முழுமையான விசாரணை நடைபெற வேண்டும். எனவே, இந்த குவாரி நிர்வாகம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் தொடர்புகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்று காவல்துறையை அண்ணாமலை வலியுறுத்துயுள்ளார்.
















