வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் எடையை குறைக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள 14 புள்ளி இரண்டு கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர்கள், 10 கிலோவாக மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என விளக்கமளித்தார்.
ஏற்கனவே சந்தையில் ஐந்து மற்றும் பத்து கிலோ இலகுரக சிலிண்டர்கள் புழக்கத்தில் உள்ள நிலையில், அவற்றை கட்டாயமாக்க எந்த அவசியமும் இல்லை எனக்கூறிய சுஜாதா சர்மா,
கடந்த மூன்று வாரங்களில் சுமார் மூன்றரை லட்சம் புதிய PNG இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், எரிவாயு இருப்பு குறித்து தேவையற்ற கவலை வேண்டாம் என்றும் எடுத்துரைத்தார்.
















