மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபுவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், பேராசிரியர் ஞானவேல் பாபு தனக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை அளித்து வருவதாகவும், செல்போனுக்கு தவறான அர்த்தங்கள் கொண்ட குறுஞ் செய்திகளை அனுப்பி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
புகாரை தொடர்ந்து கோட்டூர்புரம் போலீசார் ஞானவேல்பாபு மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பேராசிரியர் ஞானவேல்பாபு பல்கலைக் கழகத்தில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது. இந்நிலையில் பேராசிரியர் ஞானவேல்பாபுவை நெல்லையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே பேராசிரியர் ஞானவேல்பாபு மீது மேலும் 4 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். ஞானவேல்பாபு மீது குவியும் புகார்களால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
















