கே.வி.குப்பம் தொகுதியை ஒதுக்கவில்லை எனக்கூறி தவெக நிர்வாகி பிரபு ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்துகொண்டிருந்தபோது கே.வி.குப்பம் தொகுதியை தமக்கு ஒதுக்கவில்லை எனக்கூறி விடுதி வாயில் முன்பு தவெக நிர்வாகி பிரபு போராட்டத்தில் ஈடுபட்டார்.
உடனடியாக, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிர்வாகி பிரபு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொகுதியில் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பணிகளை செய்து வருவதாக தெரிவித்தார்.
2 மாதங்களுக்கு முன்னர் கட்சியில் இணைந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நபருக்கு வாய்ப்பளிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டினார்.
இதனிடையே, மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கும், பண பலம் படைத்தவர்களுக்கும் வேட்பாளர் பட்டியலில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக தவெக நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் நேற்றிரவு தவெகவில் இணைந்தவருக்கு நெல்லையில் போட்டியிட விஜய் சீட் வழங்கியதாகவும் நிர்வாகிகள் விமர்சித்துள்ளனர்.
















