காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலுடன்தான் தவெக தலைவர் விஜய்யை சந்தித்ததாக அக்கட்சி நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், விஜய் உடனான சந்திப்புகளை தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளவில்லை என்றும், கடந்த ஆறு மாதங்களில் தாம் செய்த அனைத்தும் செயல்களும், காங்கிரஸ் தலைமையின் சம்மதம் பெற்றே நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நலனுக்காகவும், பலிகடாவாக மாறவும் தயாராகவே இருந்ததாகவும் கூறியுள்ளார்.
தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையாக காங்கிரசை சேர்ந்தவர்களே பலவிதமாகப் பேசியது தனக்குத் தெரியும் எனக்கூறிய அவர், மற்றொரு மூத்த காங்கிரஸ் நிர்வாகியும், விஜய் உடனான சந்திப்பில் கலந்துகொண்டார் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அனுமனைப் போன்றது என்றும், அதற்கு தன்னுடைய சொந்த பலமே தெரியாது எனவும் குறிப்பிட்டார்.
ஒரு மாநிலத்தில், தன்னை வலுப்படுத்திக்கொள்ள ஒரு தேசியக் கட்சி ஏன் கடுமையாக உழைக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், ஒரு கட்சி தொண்டரையோ, தலைவரையோ அமைச்சராக்கி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள ஏன் ஆசைப்பட கூடாது என வினவினார்.
ராகுல் காந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில், தவெக உடனான கூட்டணியை மூன்றில் இரண்டு பங்கு நிர்வாகிகள் ஆதரித்ததாகவும், காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என சில நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையைச் சிலர் ஆதரித்ததாகவும்,
ஒரு சிலரோ நாம் மாற்று வழிகளைப் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய தேர்தல் கடுமையான போட்டி நிறைந்த தேர்தலாக இருக்கும் என்றும், தவெக ஓட்டை பிரிக்கும் என்பதால், இது ஆளும் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
















