திமுக எம்.பி. ஆ.ராசாவின் ஆடியோ வெளியானதற்கு பிறகு, அவரை பிரச்சார கூட்டத்திற்கு அழைக்க வேண்டாம் என தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
33 தொகுதிகள் அடங்கிய சென்னை மண்டல பொறுப்பாளராக திமுக எம்பி ஆ.ராஜா நியமிக்கப்பட்டார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 11 திமுக மாவட்ட செயலர்களுக்கு மேலதிகாரியாக இருந்த அவர், அதிகார திமிருடன் பேசுவதாக மாவட்ட செயலாளர்கள் திமுக தலைமைக்கு புகார் தெரிவித்தனர்.
மேலும், தொகுதி நிர்வாகிகள் உடனான கலந்துரையாடலின்போது ஆ.ராசா, சேகர்பாபு இடையே முதலமைச்சர் முன்னிலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் ஆ.ராசாவை விட சேகர்பாபு தான் முக்கியம் என்று எண்ணிய திமுக தலைமை, அமைச்சர் சேகர்பாபுவின் சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 7 தொகுதிகளில் 3 தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றியது.
அமைச்சர் சேகர்பாபுவின் கை ஓங்கியதால் தேர்தல் பணிகளில் இருந்து ஆ.ராசா ஒதுங்கியிருந்த நிலையில், ஆடியோ லீக் விவகாரம் திமுக தலைமைக்கு தலைவலியை கொண்டுவந்துள்ளது. ஆ.ராசா மீது திமுக தலைமை கோபத்தில் உள்ளதால், நட்சத்திர பேச்சாளரான ஆ.ராசாவை திமுக நிர்வாகிகள் பிரச்சாரத்திற்கு அழைப்பதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
















