பசிபிக் பெருங்கடலில் தீவிரமடைந்து வரும் எல் நினோ அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நீடிக்கக்கூடும் என உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. இதனால் குளிர் காலத்திலும் எல் நினோ தாக்கம் இந்தியாவில் இருக்குமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2001-ம் ஆண்டுக்கு பிறகு பதிவான 4-வது மிக குறைந்த மழைப் பொழிவுடன் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்துள்ளது.தென்மேற்கு பருவமழை காலத்தில் சராசரியை விட 13 சதவீதம் குறைவான மழையே பெய்துள்ளது. குறிப்பாக கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மிக நீண்ட கால இடைவெளியில் இந்தியாவில் மழையின் 87.4 சதவீதமாக பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் எல்நினோவின் தாக்கம் சாதகமாக அமைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் வளிமண்டல அழுத்த மாறுபாடுகளை ஏற்படுத்தி பருவ மழையைக் குறைத்த எல் நினோ, இந்தக் குளிர் காலத்தில் வழக்கத்தை விடவும் அதிகமான வெப்பச் சூழலை உருவாக்கும் என்றும் கடுமையான பனிப்பொழிவைக் குறைக்கும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.
ஏற்கெனவே தீவிரமான எல் நினோ தாக்கம் காரணமாக 2015-ல் கடுமையான மழைப்பற்றாக்குறைக்குப் பிறகு, அந்த ஆண்டு இந்தியாவின் குளிர்காலம் வழக்கத்திற்கு மாறாக வெப்பமான குளிர்காலமாக இருந்தது.
2015-ல் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது போல, இந்த ஆண்டும் வங்கக்கடலில் ஏற்படும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு மற்றும் தீவிர புயல்கள் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்தியாவில் மழை பெய்தாலும், நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் குளிர்கால மழைப்பொழிவு மிகவும் குறைந்து வறட்சி ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக குளிர்காலம் வெப்பமாக மாறுவதால், மண்ணின் ஈரப்பதம் குறைந்து விடுவதால் கோதுமை, கடுகு போன்ற Rabi உள்ளிட்ட குளிர்காலப் பயிர்களின் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நாட்டின் 282 மாவட்டங்களில் குறைவான மழையும், 34 மாவட்டங்களில் மிகக் குறைவான மழையும் பதிவாகியுள்ள நிலையில் (Kharif) காரீஃப் பருவ விதைப்பு பரப்பு மொத்தமாக 13.54 லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது. நெல் விதைப்பு பரப்பளவு மட்டும் சுமார் 16.32 லட்சம் ஹெக்டேர் சரிந்துள்ளது. மேலும் நாட்டின் 178 முக்கிய நீர்நிலைகளின் நீர்மட்டமும் அதிகமாக குறைந்துள்ளது.
இந்நிலையில் குளிர் காலத்தையும் தாக்கும் எல்நினோ காரணமாக ரபி பருவச் சாகுபடியும் பாதிக்கப்பட்டால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
















