நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் 5ஜி இணைய சேவை சென்றடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
10-வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டை டெல்லியில் உள்ள யஷோபூமியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
பின்னர் உரையாற்றிய பிரதமர், நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் 5ஜி இணைய சேவை சென்றடைந்துள்ளதாக தெரிவித்தார்.
2022-ம் ஆண்டை விட தற்போது இணைய வேகம் 10 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
10 ஆண்டுகளில் தொலைத்தொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய இந்தியா, பழமையான சட்டங்களைத் திருத்தி, தொலைத்தொடர்பு துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவில் கேமிங் துறை வேகமாக வளர்ந்து வருவதாகவும், டிஜிட்டல் விழிப்புணர்வின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதாகவும் கூறினார்.
தொழில்நுட்பங்களை இந்தியாவிலேயே உருவாக்க வேண்டும் என்றும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் காரணமாகவே குழந்தைகள் தொடர்ந்து கற்கவும், மக்கள் தொடர்பில் இருக்கவும் முடிந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
















