உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற உலகக்கோப்பை கிக்பாக்ஸிங் போட்டியில், தமிழக வீரர்கள் 3 தங்கம் உட்பட 6 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரில், கிக்பாக்ஸிங் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றன. இதில், இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழக கிக்பாக்ஸிங் வீரர்கள் தங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன்படி, 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர். ஜூனியர் ஆண்கள் பிரிவில் அகில்ரக்ஷித், இளம் வயது சிறுமியர் பிரிவில் போட்டியிட்ட ரக்ஷத்ரா, ஆடவர் 47 கிலோவிற்குக் கீழ் போட்டியிட்ட கிஷோர் ஆகியோர் பதக்கங்களை வென்றுள்ளனர். சர்வதேச அளவிலான போட்டியில் தமிழக வீரர்கள் பதக்கங்களை வென்றுள்ளதற்கு, தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக்பாக்ஸிங் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
















