திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற நவராத்திரி பிரம்மோற்சவ விழா, சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம், கல்ப விருக்ஷ வாகனம் என பல்வேறு வாகனங்களில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று, கோயிலில் இருந்து அதிகாலை உற்சவ மூர்த்திகளும் சக்கரத்தாழ்வாரும் ஊர்வலமாக வராஹ சுவாமி கோயிலுக்கு வந்தனர். வராஹ சுவாமி கோயில் எதிரே மலையப்ப சுவாமிக்கு பால்,தயிர், தேன், இளநீர், உள்ளிட்ட திரவியங்களை கொண்டு திருமஞ்சனம் நடைபெற்றது.
பின்னர் ஏழுமலையான் கோயில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் தெப்பக் குளத்தை சுற்றியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்கு பிறகு புனித நீராடினால் சகல பாவங்களும், தோஷங்களும் விலகி கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம்
















