சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால், தரமணி சாலையில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
குறிப்பாக, ஓஎம்ஆர் செல்லும் தரமணி சாலையில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியதால், பணிக்குச் செல்வோர் மற்றும் கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் கனமழையால் வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காகப் பாய்மரப் படகுகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
சென்னை வேளச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நேற்று இரவு பெய்த கனமழையால் ஏஜிஎஸ் காலனி, ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இதையடுத்து, மழைநீரை வெளியேற்ற 20 மோட்டார்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தாழ்வான பகுதியாக இருப்பதால் நீரை வெளியேற்றுவதிலும், நிரந்தரத் தீர்வு காண்பதிலும் சவால்கள் இருப்பதாகக் கூறினார்.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் மழைக்கால முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு, சாலையோரக் கடையில் காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் மரிய வில்சன், பொதுமக்களுடன் கலந்துரையாடி கவனம் ஈர்த்தார். சாலையோரக் கடையில் தோசை, வடை சாப்பிட்ட அவர், அங்கிருந்தவர்களுக்கும் காலை உணவு வாங்கிக் கொடுத்தார். மேலும், சாலையோரக் கடைகளில்தான் மக்களுடன் பேசவும், அவர்களின் குறைகளைக் கேட்டறியவும் முடியும் எனத் தெரிவித்தார்.
















