அமெரிக்கா – ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் சமரச முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அந்நாட்டு ராணுவத் தளபதி அசிம் முனீர் டெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணம் பேச்சுவார்த்தையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா? என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்கா- ஈரான் போர் நடைபெற்று வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொண்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் எச்சரிக்கையை ஈரான் தலைவர்களிடம் அவர் எடுத்துச் சென்றதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்தச் சந்திப்பில் ஈரான் தெரிவித்த கருத்துகள், பேச்சுவார்த்தைக்கான பாதை இன்னும் கடினமாகவே இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன.
ஈரானின் முக்கியப் பாதுகாப்பு அதிகாரியான மொஹ்சென் ரெசாயை ((Mohsen Rezaei)) அசிம் முனீர் சந்தித்தபோது, இருவருக்கும் இடையிலான வரவேற்பு மிகவும் இறுக்கமாக இருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அதே நேரத்தில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அசிம் முனீரை அன்புடன் வரவேற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த மாறுபட்ட வரவேற்பு கவனத்தை ஈர்த்தாலும், சந்திப்பின் முக்கியத்துவம் அதற்குப் பிறகு வெளியான கருத்துகளில்தான் இருக்கிறது.
அமெரிக்காவின் கோரிக்கைகளுக்காக ஈரானின் அணுசக்தித் திட்டத்தில் சமரசம் செய்ய முடியாது என்பதே அந்நாட்டு தலைவர்களின் நிலைப்பாடாக வெளிப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
ஈரான் செறிவூட்டிய யுரேனியத்தை நாட்டுக்கு வெளியே கொண்டு செல்வது உள்ளிட்ட நிபந்தனைகளை அமெரிக்கா வலியுறுத்துவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையும் ட்ரம்ப் தரப்பிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், ஈரானின் பாதுகாப்பு அதிகாரி மொஹ்சென் ரெசாய், செறிவூட்டப்பட்ட அணுசக்திப் பொருட்களில் சிறிய அளவைக்கூட நாட்டை விட்டு வெளியே அனுப்ப முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்ததாக ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அணுசக்திப் பொருட்கள் ஈரானின் தேசியச் சொத்து என்றும், அவை நாட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்மூலம், அமெரிக்காவின் அழுத்தத்தால் மட்டும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள ஈரான் தயாராக இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பாகவே சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஈரான் வலியுறுத்துகிறது.
அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்குவது, வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளை விடுவிப்பது, பிராந்தியத்தில் நீடிக்கும் மோதல்களுக்கு முடிவு காண்பது உள்ளிட்ட நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும், அமெரிக்காவின் அச்சுறுத்தல்களும் தடைகளும் நீக்கப்பட்ட பிறகே பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் நாடாளுமன்றத் தலைவர் முகமது பாகர் காலிபாஃப் ((Mohammad Bagher Ghalibaf)), ஈரானின் நம்பிக்கையை அமெரிக்கா பெற வேண்டுமானால், அந்நாட்டின் ஏழு நிபந்தனைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதாவது, முதலில் ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தில் சலுகைகளை வழங்க வேண்டும் என்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பு. ஆனால், பேச்சுவார்த்தைக்கு முன்பே அமெரிக்கா தனது அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்பது ஈரானின் கோரிக்கை.
இந்த முரண்பாடுதான் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படுவதற்குத் தடையாக இருக்கிறது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கச் செய்வதில் பாகிஸ்தான் முக்கியப் பங்காற்ற முயற்சிக்கிறது.
ஆனால், அசிம் முனீரின் பயணத்துக்குப் பிறகும் அணுசக்தித் திட்டம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே எந்தப் புதிய உடன்பாடும் பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை. இதனால், இரு நாடுகளையும் ஒருசேர பேச்சுவார்த்தைக்கு அழைத்து வர வேண்டிய சவால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்த மோதல் நீடித்தால் மீண்டும் சர்வதேச எண்ணெய் விநியோகம், எரிபொருள் விலை, உலக வர்த்தகம் எனப் பல துறைகளும் பாதிக்கப்படலாம். குறிப்பாக, எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்துள்ள நாடுகளுக்கு விலை உயர்வு கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தக்கூடும்.
இதுபோன்ற சூழலில் அமெரிக்கா, ஈரான் இடையே சமரசம் சாத்தியமாகுமா? அல்லது இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மேலும் நீடிக்குமா? இதற்கான விடை, அமெரிக்காவும் ஈரானும் தங்களது நிபந்தனைகளை எப்படி தளர்த்திக் கொள்கின்றன என்பதில்தான் அடங்கியிருக்கிறது….
















