ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான முதல் போட்டியிலேயே அரை சதமடித்து தமிழகத்தின் இளம் வீரர் சாய் சுதர்சன் அசத்தி உள்ளார்.
இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கடந்த 17-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி இந்திய வீரர்களின் அசத்தலான பந்துவீச்சால் 116 ரன்களில் சுருண்டது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தமிழகத்தின் இளம் வீரர் சாய் சுதர்சன் அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடி அசத்தினார். அவர் 43 பந்தில் 9 பவுண்டரியுடன் 55 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே அரை சதமடித்த நான்காவது இந்திய தொடக்க வீரர் என்ற சாதனையை சாய் சுதர்சன் படைத்துள்ளார்.
இந்திய அணியில் விளையாடியதன் மூலம் தனது கனவு நிஜமாகியதாக சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, எல்லோரையும் போல் சிறுவயதில் இருந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு எனக்கும் இருந்தது. கடின முயற்சியின் மூலம் கனவுகள் நனவாகும்.
இந்திய அணிக்காக விளையாடி, எனது பங்களிப்பை செய்தது பாக்கியம். இந்த நினைவுகளை மேலும் நீட்டித்துக் கொண்டு செல்ல பார்க்கிறேன். கே.எல்.ராகுலிடம் இருந்து அறிமுகத்திற்கான இந்திய அணியின் தொப்பியை வாங்கியது சிறப்பான தருணம். ஷ்ரேயாஸ் அய்யருடன் இணைந்து விளையாடியது சிறந்த தருணம் என்று கூறினார்.