கிண்டி ரேஸ் கிளப்பில் பூங்கா அமைக்கப்படுமா ? அல்லது பசுமை தீர்ப்பாயத்தின் ஆலோசனையை ஏற்று புதிய நீர்நிலை உருவாக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து இன்றைய Behind the news பகுதியில் பார்க்கலாம்…!
சென்னையில் வெங்கடாபுரம், அடையாறு மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களில் உள்ள 160 ஏக்கர் நிலம் 1945ம் ஆண்டு கிண்டி ரேஸ்கிளப்புக்கு 99 ஆண்டு காலம் குத்தகைக்கு வழங்கப்பட்டது. குத்தகை காலம் முடிவடையும் முன்பே, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தேவைப்படுவதாக கூறி குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, அந்நிலத்தில் பூங்கா அமைக்க முடிவு செய்திருப்பதாக அரசாணை பிறப்பித்துள்ளது.
பிற மாநகரங்களை ஒப்பிடும் போது சென்னையில் தனி மனிதருக்கான பசுமை நிலப்பகுதி மிகக் குறைவாக உள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. வனப்பகுதி, பூங்காக்கள், விளையாட்டு மற்றும் திறந்த வெளித்திடல்கள் என அனைத்தும் சேர்ந்தே சென்னையின் பரப்பளவில் 6.7 சதவிகிதம் மட்டுமே பசுமை வெளியாக உள்ளது.
சென்னையின் பசுமைப் பகுதியை உருவாக்கும் நோக்கிலும், அதிகரிக்கும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டும் அதிகளவிலான பசுமை வெளிகளை சென்னையில் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்களோட உடல்நலன், உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்காகவும் போதுமான இடங்களை உருவாக்க முடிவெடுத்த தமிழக அரசு, சென்னை கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தை தோட்டக்கலைத்துறை மூலம் பூங்காவாகவும், பசுமை வெளியாகவும் மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில், வேளச்சேரி ஏரிகள் பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்த வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் பூங்காவிற்கு பதிலாக நீர்நிலையுடன் கூடிய பூங்காவை உருவாக்கலாம் என ஆலோசனை கூறியுள்ளது. அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணையின் போதும், ரேஸ் கிளப் நிலத்தை புதிய நீர்நிலையாக மாற்றலாம் என மீண்டும் ஆலோசனை வழங்கியது.
இது தொடர்பாக பிறதுறை செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்த பசுமைத் தீர்ப்பாயம், வெள்ளத்தால் ஒருபுறமும், வறட்சியால் ஒருபுறமும் பாதிக்கப்படும் சென்னையில் புதிய பசுமை பூங்காவை உருவாக்குவதை விட நீர்நிலை உருவாக்குவதே சிறந்த முடிவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த ஆலோசனைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சென்னையில் ஏற்கனவே இருக்கும் நீர்நிலைகளுக்கு உயிர் கொடுப்பதும்,, புதிய நீர்நிலைகளை உருவாக்குவதும் மிக அவசியம் என தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் சென்னையில் இருந்த நீர்நிலைகளில் பாதியளவு கூட தற்போது இல்லாததன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் பருவமழை, புயல், வெள்ளத்தின் போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
பெருவெள்ள காலங்களில் வீணாகும் மழைநீரை சேமிக்க உதவுவதோடு, கோடைக் காலங்களில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை போக்கவும் பயன்படும் என்பதால் கிண்டி ரேஸ் கிளப்பில் புதிய நீர்நிலை அமைப்பதே சரியானதாக இருக்கும் என பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் தாக்கல் செய்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
கிண்டி ரேஸ் கிளப்பில் பூங்கா அமைக்கப்படுமா ? அல்லது பசுமை தீர்ப்பாயத்தின் ஆலோசனையை ஏற்று புதிய நீர்நிலை உருவாக்கப்படுமா ? என்ற அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.