செஸ் உலகின் ஜாம்பவான்களை வீழ்த்தி, உலக கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று, உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றுள்ள ராஜாதி ராஜா குகேஷ் குறித்த செய்தித் தொகுப்பு ஒன்றை தற்போது காணலாம்..
சதுரங்க உலகத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் எப்போதும் தனித்துவமிக்கதாகவே திகழ்கிறார்கள். 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு, தமிழகத்தில் இன்னொரு விஸ்வநாதன் ஆனந்த் உருவாக குறைந்தது 30 வருடங்களாவது தேவைப்படும் என எண்ணிய நிலையில், தற்போதைய இளம் வீரர்கள் அடுத்தடுத்த பிளாக் பஸ்டர்கள் வெற்றிகளின் மூலம் சரித்திரமிக்க சாதனைகளை படைத்து வருகின்றனர்.
இந்தியாவின் இளம் வீரர்களில் ஒருவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று செஸ் உலகின் முடிசூடா மன்னனாக உருவெடுத்துள்ளார். உலக நடப்புச் சாம்பியனான சீனாவைச் சேர்ந்த டிங் லிரென் உடன் மோதிய குகேஷ் இறுதிச்சுற்று வரை போராடி உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
தனது 17 ஆவது வயதிலேயே உலகின் டாப் 10 வீரர்கள் பட்டியலுக்கு முன்னேறிய குகேஷ், உலக செஸ் அரங்கில் டாப் 10 இடத்துக்கு முன்னேறும் இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் கல்வி பயின்று வரும் குகேஷ், குறைந்த வயதிலேயே இத்தகைய சாதனைகளை படைத்ததற்கு பின்னால் பெரும் போராட்டமே அடங்கியிருக்கிறது.
2015 ஆம் ஆண்டு தனது 9 வயதில், ஆசிய பள்ளி செஸ் சாம்பியன்ஷிப், 12 வது வயதில் உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப், 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தனிநபர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ், ஆசிய யூத் சாம்பியன்ஷிப், டீம் ரேபிட் மற்றும் பிளிட்ஸ், தனிநபர் கிளாசிக் என அவர் வென்ற பட்டங்களை பட்டியலிடவே நீண்ட நேரங்கள் செலவிட வேண்டியிருக்கும்.
12 வயதிலேயே இளம் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்த குகேஷ், 2021 இல் ஜூலியஸ் பேர், கெல்பாண்ட் சேலஞ்ச் உள்ளிட்டவைகளை கைப்பற்றியுள்ளார். நடப்பாண்டு ஹங்கேரியில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணியில் விளையாடி, தங்க மகனாகவும் ஜொலிக்கத் தொடங்கினார் குகேஷ்
ஏம் செஸ் Rapid முறை போட்டியில், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி, இளம் வயதிலேயே கார்ல்சனை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் குகேஷ். அடுத்தடுத்து 2023 இல் பிடே ரேட்டிங் புள்ளிகளில் 2750 மதிப்பீட்டை பெற்ற இளம் வீரர் மற்றும் உலக கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெற்ற இளம் வீரர் உள்ளிட்ட சாதனைகளை அடுக்கடுக்காக தனது 17 வது வயதிலேயே அசாத்தியமாக புரிந்தவர் இந்த இளம் கிராண்ட் மாஸ்டர்.
சதுரங்க உலகில் ஒருபுறம் பிரக்ஞானந்தா, மறு புறம் குகேஷ் என இருந்தாலும், இருவரும் தமிழ்நாட்டு வீரர்களே ஆவர். ஆனால் உலக செஸ் அரங்கில் இருவரும் மின்னல் முரளிகள் என்றே சொல்லலாம்.
பிரக்ஞானந்தா கடந்த உலக கோப்பை செஸ் தொடரில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்று உலக கேண்டிடேட்ஸ் தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றார். ஆனால் குகேஷ் காலிறுதியில் மேக்னஸ் கார்ல்சன் இடம் தோல்வியுற்று, உலக கேண்டிடேட்ஸ் தொடருக்கன வாய்ப்பை நழுவ விட்டாலும், தனது தொடர் முயற்சியால் அடுத்தடுத்து சர்வதேச செஸ் தொடர்களில் கில்லியாக விளையாடி உலக கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெற்றார்.
கேண்டிடேட்ஸ் தொடரில் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி என மூன்று தமிழ்நாடு போட்டியாளர்கள் களம் கண்ட நிலையில், குகேஷ் தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டி ஒரு சுற்றில் மட்டுமே தோல்வி அடைந்து 9 புள்ளிகள் எடுத்து முதல் இடம் பிடித்தார். 14 சுற்றுகள் முடிவில் முதல் இடத்தில் இருந்த குகேஷ் உலக கேண்டிடேட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
பொதுவாகவே உலக கேண்டிடேட்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற போட்டியாளர், நடப்பு உலக சாம்பியன் உடன் புதிய உலக சாம்பியன் பட்டத்திற்காக போட்டியிடுவார். அதன்படி குகேஷ் உலக சாம்பியன் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் உடன் களம் கண்டார்.
செஸ் உலகின் ஒட்டுமொத்த பார்வையும் குகேஷ் பக்கம் தான் திரும்பியது. தனக்கு 11 வயது இருக்கும் பொழுது குகேஷ் இடம் ஒரு நிருபர், உங்களின் இலக்கு என்ன என கேட்ட போது, தான் இளம் வயதிலேயே உலக சாம்பியன் ஆக வேண்டும் என அவர் சொல்லியிருப்பார். இப்போது சொன்னதை தனது இளம் வயதிலேயே சாதித்துக் காட்டியுள்ளார் இந்த குகேஷ் தொம்மராஜு…