சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பியிருக்கிறார் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா. இந்த வெற்றிப் பயணம், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்குப் பேருதவியாக அமையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும் இணைந்து முன்னெடுத்த திட்டம் ஆக்சியம்-4 .
இத்திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டனர்.
அவர்கள் இருந்த டிராகன் க்ரூஸ் விண்கலத்தை சுமந்து கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘பால்கன் 9’ ராக்கெட் சீறிப்பாய, 28 மணி நேர பயணத்திற்குப் பின் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர்.
ஜூன் 26ம் தேதி விண்வெளி மையத்தில் கால்பதித்த அவர்கள், 15 நாட்கள் அதாவது 433 மணி நேரத்தை விண்வெளியில் செலவிட்டனர். விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட ஆக்சியம்-4 குழுவினர், 122 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து பூமியை 288 முறை சுற்றி வந்தது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் பயிர்களின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை அறிய, வெந்தயம், பச்சைப் பயறு விதைகளை எடுத்து சென்று பயிரிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிலையில், திங்கள்கிழமை ஆக்சியம்-4 குழுவினர் டிராக்ன் க்ரூஸ் விண்கலம் மூலம் இந்திய நேரப்படி பிற்பகல் மூன்று மணியளவில் பூமியை நோக்கிப் புறப்பட்டனர். 22 மணி நேர பயணத்திற்கு பிறகு, 17 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் கீழே வரத் தொடங்கிய டிராகன் க்ரூஸ் விண்கலம், ஸ்பிளாஷ் டவுன் எனப்படும் முறையில் அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பகுதியில் தரையிறங்கியது.
கடலில் மிதந்த டிராகன் விண்கலத்தை மீட்டு கரைக்குக் கொண்டுவந்தது அமெரிக்கக் கடற்படை. அதன் தொடர்ச்சியாக சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் ஒவ்வொருவராக டிராகன் விண்கலத்தில் வெளியில் வந்து கையசைத்தனர். சுபான்ஷு சுக்லா வெளியில் வருவதைத் திரையில் கண்ட அவரது பெற்றோர் ஆனந்தக் கண்ணீரில் திளைத்தனர்.
4 வீரர்களுக்கு முதற்கட்டமாக மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் புவி ஈர்ப்பு விசைக்கு மீண்டும் பழகுவதற்காக 7 நாட்கள் சிறப்புச் சிகிச்சை மையத்தில் இருப்பார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
இது தொடர்பாகப் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, விண்வெளிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திலிருந்து பூமிக்குத் திரும்பியுள்ள குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்திய விண்வெளி வீரரான அவரது அர்ப்பணிப்பு, தைரியம் முன்னோடி மனப்பான்மை 100 கோடி மக்களை ஊக்குவித்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
இந்த வெற்றிப் பயணம், 2027ம் ஆண்டு மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்குப் பேருதவியாக அமையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.