பாகிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அரசியல் சதியை சத்தமே இல்லாமல் அரங்கேற்றியிருக்கிறார் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர்… ராணுவ சர்வாதிகாரிகளால் முன்பு ஆட்சி கவிழ்ப்பு நடந்திருந்தாலும், அதே பாணியைப் பின்பற்றாமல் வானளாவிய அதிகாரத்தைப் பெறுவதற்கான காய்களை நகர்த்தியிருக்கிறார் அசிம் முனீர். அப்படி அவர் என்ன செய்தார் பார்க்கலாம் விரிவாக.
ஆப்ரேஷன் சிந்தூரில் இந்தியா கொடுத்த மரண அடியால் விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான்…. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போன்று செயல்பட்டு வரும் பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடன் இணைந்து ராணுவத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வகையில் அரசியல் சதியை அரங்கேற்றியிருக்கிறார்.
பாகிஸ்தானின் அதிகார சமநிலையை தலைகீழாக மாற்றுக்கூடிய 27வது அரசியலமைப்பு திருத்தத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியதுதான் இதற்கெல்லாம் காரணம். புதிய சட்டத்திருத்தம் ராணுவ தளபதி ஃபீல்ட மார்ஷல் அசிம் முனீருக்கு கூடுதல் அதிகாரத்தை அளிப்பதோடு, வாழ்நாள் முழுவதும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத அளவுக்குச் சட்டப் பாதுகாப்பையும் கொடுக்கிறது.
குறிப்பாக முப்படைகளை கட்டுப்படுத்துதற்கும், கட்டளையிடுவதற்கும் அதிகாரம், அணு ஆயுதங்கள்மீதான அதிகாரம் போன்றவற்றை அசிம் முனீர் பெறுகிறார்… பாகிஸ்தான் போன்ற நிலையற்ற அரசியல் சூழலைக் கொண்ட நாட்டில், முழு அதிகாரமும் குறிப்பிட்ட நபருக்கு மாறுவதை சாதாரணமானதாக எடுத்துக் கொள்ள முடியாது…. பாகிஸ்தான் ஆட்சி கவிழ்ப்புகளையும், ராணுவ சர்வாதிகாரிகளையும் கண்டிருந்தாலும், ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் நடத்தும் ஆட்சிக் கவிழ்ப்பு முறை என்பது பாகிஸ்தானின் வரலாறு இதுவரை இல்லை…. 27வது அரசியலமைப்பு திருத்தம், வெறும் சட்டத்திருத்தம் மட்டுமல்ல, அசிம் முனீரை ராணுவ தளபதி என்ற நிலையில் இருந்து, மன்னராக மாற்றுவதற்கு ஒப்பான சட்டமாகவே பார்க்கப்படுகிறது. இது அசிம் முனீருக்கு பாகிஸ்தானையே தாரை வார்த்து கொடுப்பதற்கு ஒப்பான திருத்தமாகவே கருதப்படுகிறது.
நிலையற்ற அரசியல் சூழல் இல்லாத பாகிஸ்தானில் கடந்த காலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், 27வது அரசியலமைப்பு திருத்தம் என்பது எந்தளவுக்கு ஆபத்தானது, அபத்தமானது என்பது புரியும். பெரும்பாலான ஆட்சிக் கவிழ்ப்புகளைப் போல் அல்லாமல், இது ஒரு பொம்மை ஆட்சியை உருவாக்க வல்லது. 27வது அரசியலமைப்புத் திருத்தம், ராணுவ மேலாதிக்கத்தை சட்டப்பூர்வமாக்குகிறது, ராணுவத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் அதிகாரத்தை வழங்குகிறது, அணுசக்தி அதிகாரம் மட்டுமல்லாமல் நீதித்துறையை கூட ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீரின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கிறது.
பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்கள் அயூப் கான், ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரஃப் ஆகியோர் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்து, மூன்று முறை ராணுவ ஆட்சியை, ஆட்சிக் கட்டிலில் அமர வைத்திருந்தனர்.. ஆனால் அசிம் முனீர் நடத்தும் நான்காவது சதி, பாகிஸ்தானில் எந்தவொரு ராணுவத் தலைவராலும் செய்யப்படாதது, துணிச்சலானது என்றே வர்ணிக்கப்படுகிறது.
முனீரின் சூழ்ச்சி நுட்பமானது மட்டுமல்ல, மிகவும் ஆபத்தானதும்கூட. பாகிஸ்தான் ராணுவம் சட்டப்பூர்வமாகப் பாகிஸ்தானைக் கைப்பற்றும். அரசியலமைப்பின் 243வது பிரிவைத் திருத்தும் இந்த மசோதா, ராணுவத்தின் நடைமுறை ஆதிக்கத்தை முறைப்படுத்துகிறது, ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையிடமிருந்து கட்டுப்பாட்டை ஒரு புதிய பாதுகாப்புப் படைத் தலைவருக்கு (CDF) மாற்றுகிறது. கடந்த கால ராணுவத் தளபதிகளைவிட முனீருக்கு அதிகாரம் குவிந்திருக்கும் நிலையில், வரும் காலத்தில் மிகப் பெரிய ஆபத்து ஏற்படலாம் என்றே உலக நாடுகள் கருதுகின்றன.
முனீரின் வானளாவிய அதிகாரம், இந்தியாவுடன் ஆபத்தான சமச்சீரற்ற தன்மையை உருவாக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறினாலும், இந்தியா எதற்கும் தயாரான நிலையிலேயே தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
















