கார்த்திகை தீப விழாவிற்கான முன்னேற்பாடுகள் களைகட்டியுள்ளன. அதிலும் சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் விதவிதமான விளக்குகளைத் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது பார்க்கலாம்.
இப்படி சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி சூடிபிடித்துள்ளது. மேல்சித்தூர், குறுக்கப்பட்டி, ஆலச்சம்பாளையம், மேட்டுத்தெரு, மயிலம்பட்டி, தேவூர், கோனேரிப்பட்டி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்டோர் மண்பாண்டங்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு மண்பானைகள், தீபாவளி மற்றும் கார்த்திகை தீபத்தின்போது அகல் விளக்குகள் மற்றும் கோடை காலத்தில் தண்ணீர் வைப்பதற்கான பானைகள் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்வது வழக்கம்.
அந்த வகையில் தற்போது கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி சூடுபிடித்துள்ளது. ஒருமுகம், இருமுகம், மூன்று முகம், நான்கு முகம், ஐந்து முகம், பாவை விளக்கு, மயில் விளக்கு, அன்னவிளக்கு என விதவிதமான விளக்குகளைத் தயாரிக்கும் நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் வாடிக்கையாளர்கள் அவற்றை வாங்கிச் செல்கின்றனர்.
குறிப்பாகச் சாதாரண அகல் விளக்கு 70 பைசாவுக்கும், 100 விளக்குகள் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இப்படி அகல்விளக்குகள் தயாரிப்பு பணிகளில் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டாலும் சில இடையூறுகள் ஏற்படத்தான் செய்கின்றன. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் எடப்பாடி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பின.
இதனால் அகல் விளக்குகள் தயாரிக்க தேவையான மண் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஆனாலும் கூடுதலாகச் செலவு செய்து மண் வாங்கும் தொழிலாளர்கள் விளக்குகளைத் தயாரித்து வருகின்றனர். ஏரியில் போதுமான அளவு களிமண் எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும், மின்சாரத்திற்கு மானியம் வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கார்த்திகை தீபத்தையொட்டி அகல்விளக்குகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையும் அகல் போல் ஒளிர வேண்டும் எனக் காத்திருக்கின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
















