டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் சிக்கியுள்ள அல்-ஃபலா கல்வி குழுமம் மாணவர்களிடம் மோசடி செய்து, கோடி கோடியாய் பணத்தை சுருட்டியதை அமலாக்கத்துறை விசாரணை அம்பலப்படுத்தியுள்ளது. அது எவ்வாறு நடந்தது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
15 பேர் கொல்லப்பட்ட டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை, புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகள், நாடு முழுவதும் சல்லடை போட்டுக் குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றி வருகின்றனர்… இந்தச் சூழலில் கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா அறக்கட்டளை, பல்கலைக்கழக நிறுவனங்கள் தொடர்புடைய 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.
அப்போது, அல்-ஃபலா குழுமத்தின் தலைவர் ஜாவத் அகமது சித்திக்கின் அறக்கட்டளையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் கணக்கில் வராத 415 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது. ஜாவத் அகமது சித்திக் வளைகுடா நாடுகளுக்குத் தப்பிச் சென்று குடியேற திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் அம்பலமானது.
சித்திக் மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அப்போது, 2018-19 முதல் 2024-25ம் நிதியாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், அல்-ஃபலா பல்கலைக்கழகம், கல்வி தொடர்பான ரசீதுகளில் 415 கோடியே 10 லட்சம் ரூபாயை சுருட்டியிருப்பதாக அமலாக்கத்துறை கூறியது. மோசடி, ஏமாற்றுதல், ஜோடிக்கப்பட்ட ஆவணங்களை பயன்படுத்தி, பெற்றோர்கள், மாணவர்களை ஏமாற்றி நேரடியாகப் பணம் பெற்றதும், அதனை தனிப்பட்ட காரணங்களுக்காகப் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சித்திக்கின் பணப்பரிமாற்றங்கள் குறித்து நீதிபதியிடம் தெரிவித்த அமலாக்கத்துறை, அவருக்கு ஏராளமான நிதி ஆதாரங்கள் உள்ளதாகவும், அவரது பெற்றோர் வளைகுடாவில் இருப்பதும் நிதி உதவி பெற ஒரு காரணம் என்றும் தெரிவித்தது. அனைத்தையும் கேட்ட நீதிமன்றம், சித்திக்கை டிசம்பர் 1ம் தேதி நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சித்திக்கின் ஏராளமான வங்கிக் கணக்குகளில் பெறப்பட்ட நிதி ஆதாரங்களுக்கான முழு தடயங்கள் இன்னும் கண்டறியப்படாத நிலையில், விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அல்ஃபலா கல்வி குழுமம் மோசடியாகப் பெற்ற பணம் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது
. இதனிடையே அல்-ஃபலா பல்கலைக்கழகம் ஒரு அரசு தனியார் பல்கலைக்கழகம் என்ற வகையில் பிரிவு 2(F)இன் கீழ் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பிரிவு 12(B) இன் கீழ் விண்ணப்பிக்காத நிலையில், மானியங்களை பெற தகுதியற்றது என்றும் UGC தெளிவுபடுத்தியுள்ளது.
















