இந்தியாவின் 3 எல்லை பகுதிகளை வரைபடத்தில் காட்டும் வகையில் புதிய 100 ரூபாய் நோட்டினை நேபாள அரசு வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை பிரச்னை மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்
இந்தியாவில் உள்ள உத்தராகண்ட் மாநிலத்தின் எல்லைகளாக லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் கலாபானி ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இவை நேபாள நாட்டின் எல்லையில் அமைந்துள்ளதால் அப்பகுதிகள் தங்களுக்குரியது எனப் பல காலமாக அந்நாட்டு அரசும் சொந்தம் கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், நேபாள ராஷ்ட்ரா வங்கி தற்போது புதிதாக வெளியிட்டுள்ள 100 ரூபாய்க்கான நேபாள நோட்டில், இந்தியாவின் அந்த மூன்று பகுதிகள் அடங்கிய நேபாள வரைபடம் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக இந்தியா – நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்னை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. 1816-ம் ஆண்டின் சுகௌலி ஒப்பந்தத்தின் அடிப்படையில் எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது என்ற இந்திய அரசின் நிலைபாட்டின்படி, காளி நதி கலாபானி கிராமத்தில்தான் தோன்றுகிறது.
ஆனால் அது அதற்குமேல் வடக்கே உள்ள லிம்பியாதுராவிலும் தொடர்வதால் அந்த நதி அங்கிருந்து தோன்றுவதாக நேபாளம் கூறி வருகிறது. இதனால் இப்பகுதிகள் இரு நாடுகளுக்கும் இடையே இடையூறாக இருந்து வருகிறது. இதற்கிடையே தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய 100 ரூபாய் நேபாள நோட்டில், மவுண்ட் எவரெஸ்ட் இடப்பக்கத்திலும், நேபாளத்தின் தேசிய பூவான “Rhododendron”-னின் நீர்க்குறி வலப்பக்கத்திலும் உள்ளது. நோட்டின் நடுப்பகுதியில் நேபாள வரைபடத்துடன் அசோகர் தூணும், ஒரு கொம்புள்ள காண்டாமிருகமும், அதன் கன்றும் இடம்பெற்றுள்ளன.
பார்வை குறைபாடு உள்ளவர்கள் தொடுதலின் மூலம் மதிப்பை அறிய, அசோகர் தூண் அருகே சிறப்பு தொடு குறியீட்டுக்கான கரும்புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது. பழைய 100 ரூபாய் நோட்டின் நிறமும், அளவும் இதிலும் அதே பாணியில் கொடுக்கப்பட்டுள்ளன. இடப்பக்கம் அரசு தரும் உத்தரவாத உரையுடன், நீள்வட்ட வடிவில் மாயாதேவியின் புகைப்படம் வெள்ளி மெட்டாலிக் மை மூலம் அச்சிடப்பட்டுள்ளது. மேலும், அந்த நோட்டில் பாதுகாப்புக்காக 2 மில்லிமீட்டர் தடிமனுடைய சிறப்பு பாதுகாப்பு நார் சேர்க்கப்பட்டுள்ளது.
நேராகப் பார்க்கும் போது சிவப்பு நிறத்திலும், சாய்த்து பார்க்கும்போது பச்சை நிறத்திலும் காட்சியளிக்கும் இந்த நார், போலி ரூபாய் நோட்டுகளை தடுக்கும் அம்சமாக இடம்பெற்றுள்ளது. இந்த நோட்டு அச்சிடப்பட்டபோது பணி பொறுப்பில் இருந்த மஹா பிரசாத் என்ற அதிகாரியின் கையொப்பமும் அதில் இடம்பெற்றுள்ளது.
நோட்டின் கீழ் பகுதியில் “2081” என் நேபாள எண்களில் தொடர் எண் குறிப்பிடப்பட்டுள்ளது. நேபாள ராஷ்ட்ரா வங்கியின் சட்டப்படி ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு அந்த வங்கியின் பொறுப்பாக இருந்தாலும், வடிவமைக்கவும், அளவு மாற்றம் செய்யவும் அரசின் ஒப்புதல் அவசியமாக உள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 2024-ம் ஆண்டு மே மாதத்தில் அப்போதைய பிரதமராக இருந்த கே.பி ஷர்மா ஒலியின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், இந்த 100 ரூபாய் நோட்டு வடிவமைப்பு ஒப்புதல் பெற்றதாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து இந்தப் புதிய நோட்டுகளின் வடிவமைப்பு, அச்சு, விநியோகம் ஆகிய முழு பொறுப்பும் கடந்த ஆண்டு அக்டோபரில், ஒப்பந்தம் செய்யப்பட்ட சீனாவின் “China Bank Note Printing and Minting Corporation” நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ஒரு ரூபாய் நோட்டை அச்சிடச் சுமார் 4 ரூபாய் 4 பைசா செலவாகும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், 300 மில்லியன் 100 ரூபாய் நேபாள நோட்டுகளை அச்சிடும் ஒப்பந்தத்தின் மொத்த செலவு சுமார் 89.96 லட்சம் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தற்போதைய மாற்று விகிதத்தின்படி 1.2 பில்லியன் நேபாள ரூபாக்கும் அதிகம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு மே 20-ம் தேதி, லிம்பியாதுரா, லிபுலேக், கலாபானி ஆகிய பகுதிகளை தனது வரைபடத்தில் சேர்த்துக் கொண்ட புதிய வரைபடத்தை அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது.
தற்போது வெளியிடப்பட்ட 100 ரூபாய் நோட்டிலும் அதே வரைபடம் இடம்பெற்றுள்ளதால், இது அரசியல் ரீதியாகவும், தூதரக ரீதியாகவும் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. இதனைக் கடுமையாக எதிர்த்துள்ள இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம், நேபாளத்தின் ஒருதலைபட்சமான நடவடிக்கை யதார்த்தத்தை எந்த வகையிலும் மாற்றாது எனக் கருத்து தெரிவித்துள்ளது.
















