வாட்ஸ்அப், டெலகிராம் போன்ற App-களை பயன்படுத்த மத்திய அரசு தற்போது சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
இன்றைய தேதிக்கு இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை மட்டும் சுமார் 53 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். டெலகிராம் செயலியை 8 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். Signal, SnapChat, ShareChat, Arattai, Josh உள்ளிட்ட செயலிகளை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால், அனைத்தும் சேர்த்து 100 கோடியை தாண்டும்.
இந்த மாபெரும் எண்ணிக்கை சைபர் மோசடியில் ஈடுபடும் நபர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக விளங்கி வருகிறது. இருந்த இடத்தில் இருந்துகொண்டு கோடி கணக்கில் மோசடி செய்ய இத்தகைய செயலிகள் அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
உதாரணமாக, வாட்ஸ்அப் செயலியில் புதிய கணக்கை தொடங்க வேண்டும் என்றால், பயன்பாட்டில் உள்ள சிம் கார்டு தேவை. அதன் மூலம் OTP-யை ஒருமுறை பெற்றுவிட்டால் போதும், வாட்ஸ்அப் கணக்கைத் தொடங்கி விடலாம். பிறகு அந்தச் சிம் கார்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்ற அவசியமோ, அந்தச் சிம் கார்டை நாம் பத்திரப்படுத்தி வைக்க வேண்டுமோ என்ற தேவையே இல்லை.
இந்த வாய்ப்பைக் கண்டுகொண்ட சைபர் குற்றவாளிகள், வாட்ஸ்அப் கணக்கை தொடங்கியவுடன், சிம் கார்டுகளை அகற்றிவிடுகின்றனர். இதனால், அவர்களை கண்டுபிடிப்பது பல சமயங்களில் சிரமமான காரியமாக மாறி விடுகிறது. இதனை தடுக்க எண்ணிய மத்திய அரசு, டெலிகாம் சைபர் செக்யூரிட்டி விதிகளில் தற்போது சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, இனிமேல் வாட்ஸ்அப், டெலகிராம், ஸ்னாப்சாட் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த வேண்டும் என்றால், சிம் கார்டு ஆக்டிவாக இருக்க வேண்டும்.
அதேபோல, தற்போது சிம் கார்டு இல்லாத மொபைல்களில் உள்ள App-களை, Wi-Fi வசதியை கொண்டு இயக்கிக் கொள்ள முடியும். ஆனால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தம், இந்த ஓட்டையையும் அடைத்துள்ளது. வாட்ஸ்அப் செயலியில் உள்ள மற்றொரு சிறப்பம்சம், அதனை கணினியிலும் பயன்படுத்த முடியும் என்பது. ஆனால் இந்த அம்சமும் சைபர் குற்றவாளிகளுக்குச் சாதகமாக உள்ளது.
எனவே, இதனையும் தடுக்கும் வகையில், சிறு மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, கணினியில் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்தால், 6 மணிநேரத்திற்கு மட்டுமே அது பயன்பாட்டில் இருக்கும். பின்னர் அதுவாகவே லாக்-அவுட்டாகி விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினியில் தொடர்ச்சியாக வாட்ஸ்அப்பை பயன்படுத்த வேண்டும் என்றால், ஒவ்வொரு 6 மணிநேரத்திற்கும் ஒருமுறை அதனை லாக்-இன் செய்ய வேண்டும் எனத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிம் பைண்டிங் முறை ஜி-பே, ஃபோன்பே போன்ற செயலிகளிலும், வங்கி ஆப்களிலும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. இந்த நடைமுறை தற்போது வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. டெலிகாம் சைபர் செக்யூரிட்டி விதிகளில் செய்யப்பட்டுள்ள இத்தகைய மாற்றங்கள் சைபர் மோடிகளை வெகுவாகக் குறைக்கும் எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாற்றங்கள் அனைத்தும் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
















