பாகிஸ்தானின் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 3 பேரை டெல்லி போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவர்கள் கைதானது எப்படி? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
டெல்லி தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுதுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் டெல்லியில் சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லியின் ரோகிணி பகுதியில் உள்ள மற்றொரு நபருக்கு ஆயுதங்களை வழங்க அவர்கள் திட்டமிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, மேலும் 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கடும் தகவல்கள் தெரிய வந்தன. இவர்கள் அனைவருக்கும் சர்வதேச ஆயுத கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருந்துள்ளது.
குறிப்பாகப் பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களை கடத்தி வந்து நாடு முழுவதும் இவர்கள் விநியோகம் செய்து வந்துள்ளனர். சாலை மார்க்கமாக ஆயுதங்களை கடத்தினால் சிக்கிக்கொள்வோம் என்பதால், ட்ரோன்களை பயன்படுத்தியுள்ளனர். எப்போதும் இரட்டை ட்ரோன்களை கொண்டே இந்தக் கும்பல் ஆயுதங்களை கடத்தியுள்ளது.
ஒரு ட்ரோன் காட்சிகளை படம் பிடிக்கவும், மற்றொரு ட்ரோன் ஆயுதங்களை எடுத்து செல்லவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ட்ரோன்கள் மூலம் ஆயுதங்களை கடத்தினாலும் ரேடார் மூலம் கண்டுபிடிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சென்சார் கருவிகளின் பார்வையில் இருந்து தப்ப கார்பன் பூசப்பட்ட பாலித்தீன் பைகளில் ஆயுதங்களை வைத்துக் கடத்தியுள்ளனர்.
இந்த அனைத்து தகவல்களையும் குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். டெல்லியில் 4 பேர் கைது செய்யப்பட்ட இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக தற்போது மேலும் 3 பேர் பிடிபட்டுள்ளனர். பஞ்சாப்பை சேர்ந்த ஹர்குன் ப்ரீத் சிங், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விகாஸ் பிரஜாபதி, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஆரிப் ஆகியோர் கைதாகியுள்ளனர்.
இவர்களுக்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-க்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியான ஷெஹ்சாத் பட்டிக்கும் ( Shahzad Bhatti) இந்த மூவருக்கும் தொடர்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25ம் தேதி பஞ்சாப்பில் உள்ள குர்தாஸ்பூர் நகர் காவல் நிலையம் முன்பு கையெறி குண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்தத் தாக்குதலை இவர்கள்தான் நடத்தியதாகவும், ஷெஹ்சாத் பட்டி இந்தத் தாக்குதலுக்கான ஆலோசனைகளை வழங்கியதாகவும் காவல் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
கைதான இவர்கள் அனைவரிடமும் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்த கட்ட விசாரணை மற்றும் சோதனைகளின் முடிவில் மேலும் பலர் கைதாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
















