நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் பெண் எம்.பி. ஒருவர் தனது காரில் நாயுடன் வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, வருகிற 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்களும் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, காங்கிரஸ் பெண் எம்.பி., ரேணுகா சௌத்ரி நாடாளுமன்றத்திற்கு தமது காரில் நாய் ஒன்றையும் அழைத்துக் கொண்டு வந்திருந்துள்ளார். கடுமையான பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்பட்டு வரும் நாடாளுமன்றத்தில் எம்.பி., ஒருவர் நாயுடன் வந்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ரேணுகா சௌத்ரி, நாடாளுமன்றம் நோக்கி வரும் வழியில் விபத்துக்குள்ளாகும் வகையில் சாலையில் திரிந்த நாய்க் குட்டியைப் பார்த்து, இரக்கப்பட்டு அதைக் காப்பாற்றவே காரில் எடுத்து வந்ததாகவும், காருடன் அந்த நாய் குட்டியையும் அனுப்பி விட்டதாகவும் விளக்கமளித்தார்.
பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் கண்ணியமிக்க வகையில் பேசினார். இதற்குப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
















