ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் பயன்படுத்தக்கூடிய AURUS SENAT கார் அனைவரின் கவனத்தை பெற்றிருக்கிறது. உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவரான புதின் பயன்படுத்தக்கூடிய காரில் என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
விளாடிமிர் புதின்…. ரஷ்யாவை ஒற்றை ஆளாகக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இரும்பு மனிதர். இவரை மீறி ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது என்ற அளவுக்கு, ரஷ்யாவின் மொத்த செயல்பாட்டையும் விரல் நுனியில் வைத்திருக்கும் நிரந்தர அதிபர். உள்நாட்டில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் எந்தவொரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் புதினும் கருத்தைப் புறந்தள்ளி விட முடியாது. அந்த அளவுக்கு ஆளுமை மிக்க தலைவராகச் சர்வதேச அரங்கில் தனது பெயரை பதியவைத்திருப்பவர் விளாடிமிர் புதின். இப்படிப்பட்ட மனிதருக்கு, எந்த அளவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் என்பதை சொல்லவா வேண்டும்?… உக்ரைன், அதற்குப் பக்கபலமாக இருக்கும் நேட்டோ நாடுகள், பின்னால் இருந்து இயக்கும் அமெரிக்கா என எதிரிகள் வரிசை கட்டி நிற்க, ரஷ்ய அதிபர் புதின் தலைக்கு மேல் எப்போதும் கத்தி தொங்கி கொண்டு தான் இருக்கிறது.
ஆனால், இதற்கெல்லாம் பயந்துவிட்டால் எப்படி , ரஷ்யாவின் அதிபராக வலம் வர முடியும் ? … அதனால், தனக்கான பாதுகாப்பை பலப்படுத்திக்கொண்டு எப்போதும் போல் வீறுநடை போட்டுக்கொண்டு தான் இருக்கிறார் விளாடிமிர் புதின் . அப்படி என்னென் பாதுகாப்பு அம்சங்கள் புதினுக்கு கிடைத்திருக்கப்போகிறது என்ற எண்ணம் தோன்றுகிறதல்லவா? அதில் முதலாவதாக இருப்பது தான் AURUS SENAT ரக கார். பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோல்ஸ் ராய்ஸின் PHANTOM ரக கார் போலவே தோற்றமளிக்கக்கூடிய AURUS SENAT கார், 2018-ம் ஆண்டில் மார்க்கெட்டிக்கு வந்தது முதல் புதினின் ஆதர்சன வாகனமாக இருந்து வருகிறது. இதில் 4.4-litre twin-turbo V8 hybrid engine பொருத்தப்பட்டிருப்பதால், 6 முதல் 9 விநாடிகளிலேயே மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டக்கூடிய திறன் படைத்தது. 9-speed automatic transmission அம்சமும் உள்ளதால், மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
5,630 மி.மீ. நீளம், 2,000 மி.மீ. அகலம், 1,300 மி.மீ. உயரம், 3,300 மி.மீ. வீல்பேஸ் இருப்பதால், AURUS SENAT காரை குட்டி ரதம் என்றே குறிப்பிடலாம். அதற்கேற்றார் போல், காரின் விலையும் இரண்டரை கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில் AURUS SENAT காரை யாராலும் நெருங்கவே முடியாது. துப்பாக்கிக்சூடு நடத்தினாலோ, வெடிகுண்டு, ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் நடத்தினாலோ விஷமிகளின் திட்டம் நிச்சயம் பொய்த்து போகும். டயர்கள் நார் நாராக கிழிந்தாலும் கூட, காரின் வேகம் துளி கூட குறையாது. விஷவாயு செலுத்தி உயிரை பறிக்க நினைத்தால், அதுவும் பகல் கனவு தான். ஏனென்றால், காரின் உள்ளேயே பிரேத்யேக AIR FILTRATION SYSTEM உள்ளது.
தகவல் தொடர்பு சாதனங்களை HACK செய்ய நினைத்தால், விஷமிகளே நொந்து போவர். இதையெல்லாம் மனதில் வைத்தே ரஷ்யாவுக்குள் எங்குச் சென்றாலும், AURUS SENAT காரில் பயணிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் விளாடிமிர் புதின். அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்கு செல்லும்போதும் அதையே பின்பற்றுகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றபோது, பிரதமர் மோடியை உடன் அழைத்துச் சென்றதும் இதே காரில் தான். தற்போது இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நிலையில், AURUS SENAT காரை கையோடு கொண்டு வந்திருக்கிறார் விளாடிமிர் புதின்.
















