சென்னை திருவான்மியூர் அருகே அரசு நிலத்தை அரசுக்கே விற்பனை செய்து சுமார் 16 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை 6 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நீலாங்கரையில் நடராஜன் என்பவர் அரசுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்து 16 கோடியே 18 லட்சத்தை மோசடியாக பெற்றுள்ளார்.
இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒருவர் புகார் அளித்தார். விசாரணையில் போலி ஆவணங்களை தயாரித்து பணத்தை பெற்றது உறுதியானது. இதையடுத்து நடராஜன், பதிவுத்துறை சார்பதிவாளர் சண்முகம், உதவியாளர் ரமேஷ் கண்ணன் உள்ளிட்டோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
















