பாங்கோங் த்-சோ அருகில் சீன துருப்புகள் தங்குவதற்காக ராணுவ தளம் கட்டப்பட்டு வருவதாக செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன… இது இருநாடுகளுக்கு இடையேயான எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளன….
பாங்கோங் த்-சோ ஏரி புவியியல் ரீதியாக முக்கியத்துவம் பெறாவிட்டாலும், சுஷூல் அப்ரோச் பகுதிக்குச் செல்லும் பாதையாக இருப்பதே இதன் முக்கியத்துவத்தை அதிகரிக்கச்செய்கிறது.
மலைத் தொடர்கள் நிறைந்த இப்பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ, சுஷூல் அப்ரோச் பகுதியையே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் சீனாவுக்கு உள்ளது. பாங்கோங் த்-சோ ஏரியின் தெற்கு மற்றும் வடக்குக் கரைப் பகுதிகள் வழியாகவே சீனா அதிக அளவில் ஊடுருவ முயற்சித்தை ஏற்கனவே உறுதிபடுத்தியிருக்கிறது இந்திய ராணுவம்…
1962-ம் ஆண்டு இந்தியா – சீனப் போரின்போது இந்திய ராணுவம் மீது சீனா நடத்திய தாக்குதலில் சுஷூல் அப்ரோச் பகுதிக்கு முக்கிய பங்கு உண்டு…. போரின்போது முதலில் சிரிஜாப் பகுதியை இழந்த இந்திய ராணுவம், 1962-ம் ஆண்டு அக்டோபர் 22-ல் பாங்கோங் த்-சோ ஏரியின் வடக்குக் கரைப் பகுதியில் மொத்தமாகக் கட்டுப்பாட்டை இழந்தது.
பாங்கோங் த்-சோ ஏரியின் தெற்குக் கரையில் உள்ள யூலா பகுதியில் இருந்த ராணுவ நிலைகளை இந்தியா கைவிட வேண்டிய சூழலும் ஏற்பட்டது…
1999 கார்கில் போரின்போது `ஆபரேஷன் விஜய்-க்காக இந்திய ராணுவம் பாகிஸ்தானுடன் போரிட சென்ற சூழலைப் பயன்படுத்தி, பாங்கோங் த்சோ ஏரியின் கரையில் இந்திய எல்லைக்குள் 5 கிலோ மீட்டர் தூரத்துக்குச் சாலை அமைத்தது சீனா… இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் தற்போது பிரச்சனை வெடித்திருக்கிறது.
பாங்கோங் த்சோ ஏரி அருகே ராணுவ தளத்தை அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது சீனா… இந்த விவகாரம் செயற்கைக்கோள் புகைப்படங்கள்மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதன்படி, கப்பல் தளம், துருப்புகள் தங்குமிடம் போன்றவற்றை நான்கு மடங்கு வேகத்தில் சீனா அமைத்து வருகிறது. இந்தக் கட்டமைப்புகள் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் அமைந்திருந்தாலும், பாங்கோங் த்சோ பகுதிக்கு அருகில் இருப்பது கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது…
மேலும் இது பிராந்திய உரிமை கோரல் பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒரு பக்கம் ராஜதந்திர ரீதியில் இரு தரப்பு உறவுகள் முன்னேற்றம் பெற்று வரும் சூழலில், சீனாவின் இந்தச் செயலை இந்தியா மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது….
உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டில் தற்போது ரோந்துப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. எல்லையில் அடிக்கடி அத்துமீறலைக் காட்டி வரும் சீனாவுக்கு இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது…
















