பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட dmk files எக்ஸ்பிரசில் ஏறுகிறதா அல்லது ஜெட்டில் ஏறுகிறதா என்பதை விரைவில் அமைச்சர் சேகர்பாபு பார்க்கப்போவதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பல்லடம் வனம் அறக்ககட்டளை தன்னார்வ அமைப்புடன் இணைந்து கோவை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், ஆசிர்யர்களே இல்லாத போது மாணவர்களால் எப்படி நன்றாக தேர்வு எழுது முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும் பள்ளிகளில் கழிப்பிடங்கள் மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பாக நீதிமன்றம் பல முறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும், ஆனால் மாநில அரசு அதனை கண்டுகொள்ளாமல் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுவதாகவும் கூறினார்.
தமிழகத்தில் காய்ச்சல் பரவுதல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த வானசி சீனிவாசன், சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், கொசுமருந்து மருந்து முறையாக அடிப்பதில்லை என்றும் கூறினார்., மக்கள் நலன் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆட்சியாளர்களிடையே அதிகார பங்கீடு சண்டை உள்ளதாகவும், எந்த திட்டத்தில் எவ்வளவு லாபம் பார்க்கலாம் என்பதை அவர்கள் நோக்கமாக கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
அரசு அதிகாரிகள் மாற்றம் தொடர்பான கேள்விக்கு அரசு அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படுவதை அரசு கைவிட வேண்டும் என்றும், அவர்களால் எந்த திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எந்த படம் வந்தாலும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு தர வேண்டும் என்றும் அவர்களுக்கு படம் தராவிட்டால் ரிலீஸ் செய்ய தியேட்டர் கிடைக்காது என்றும் திரைத்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதற்கு லியோ திரைப்படம் ஒரு உதாரணம் என அவர் கூறினார். திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தியதின் காரணமாக கடந்த முறை ஆட்சி தூக்கி எறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மின்கட்டணம் உயர்வு தொடர்பாக சட்டமன்றத்தில் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளதாகவும், சோலார் மின்சாரம் ஏற்படுத்த முயற்சிக்கும் நிறுவனங்களுக்கு மாநில அரசு நெருக்கடி கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் சத்தம் இல்லாமல் பாஜக வளர்வதாக சோனியாவிடம் இளங்கோவன் கூறியிருந்தால் அவருக்கு என் நன்றிகள் என வானதி சீனிவாசன் குறிப்பிட்டார்.