துபாய் இளவரசி ஷைக்கா மஹ்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துபாய் இளவரசியின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது பற்றிய ஒரு பதிவு!
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபராகவும் துபாயின் பிரதமராகவும் இருப்பவர் ஷேக் முகமது பின் ரஷீத் மக்தூம். இவரது மகள் ஷைக்கா மஹ்ரா.
21 வயதான ஷைக்கா மஹ்ரா பிரிட்டனில் படித்து பட்டம் பெற்றவர். இவருக்கும் துபாயை சேர்ந்த தொழிலதிபரான ஷேக் மனா பின் முகமது என்பவருக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதற்காக , ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம், தன் மகளுக்காக ஒரு வாழ்த்துக் கவிதையை எழுதியிருந்தார்.
இருவருக்கும் கடந்த மே மாதம் கத்ப் அல்-கிதாப் என்ற பாரம்பரிய இஸ்லாமிய விழாவுடன் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து ஜூன் மாதம் , திருமண வரவேற்பு விழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருமண புகைப்படங்களில், ஷைக்கா மஹ்ரா, துபாயை சேர்ந்த டிசைனர் எஸ்ரா கோடூர் வடிவமைத்த பளபளப்பான எம்ப்ராய்டரியுடன் கூடிய அழகான வெள்ளை கவுனை அணிந்திருந்தது பலரையும் வசீகரித்தது.
இந்த தம்பதியருக்கு இரண்டு மாதங்களுக்கு முன் தான் அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்நிலையில், துபாய் இளவரசி, தமது கணவரை விவகாரத்து செய்வதாக , தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
அன்புள்ள கணவருக்கு என்று தொடங்கியிருக்கும் தனது இன்ஸ்ட்டா பதிவை இப்படிக்கு முன்னாள் மனைவி என்று முடித்திருக்கிறார்.
தன் கணவர் வேறு சிலருடன் உறவில் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள ஷைக்கா மஹ்ரா, இன்ஸ்டா பதிவின் மூலமாகவே விவாகரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார். மேலும் உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளுமாறும் கேட்டு கொண்டிருக்கிறார்.
இந்த பதிவு இதுவரை 86.7 ஆயிரம் லைக்குகளைத் தாண்டி வைரலாகி வருகிறது.
சொல்லி வைத்தாற்போல் , இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த புகைப்படங்களை கணவன், மனைவி இருவரும் உடனடியாக நீக்கியுள்ளனர். மேலும் இன்ஸ்டாகிராமில், ஒருவரை ஒருவர் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளனர் . ஒருவரை ஒருவர் பிளாக் செய்துள்ளனர்.
பொதுவெளியில் துபாய் இளவரசி ஷைக்கா மஹ்ரா, இப்படி விவாகரத்து செய்திருப்பது துபாய் மக்களிடம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது .
இதனை தொடர்ந்து, சமூக வலைத்தள பக்கங்களில் பலரும் ஷைக்கா மஹ்ராவுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, சில வாரங்களுக்கு முன்பு, துபாய் இளவரசி ஷேக்கா மஹ்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”நாம் இருவர் மட்டும்” என்று தலைப்பிட்டு, தனது மகளுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.