ஞான பூமியான பாரதத்தில் இராமாயணமும் மகாபாரதமும் இரண்டு முக்கியமான இதிகாச நூல்களாகும்.
மனித வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு செய்திகள் மட்டும் இல்லாமல் யாரையும் நல்ல கதிக்குக் கொண்டுச் சேர்க்கும் அதி அற்புதமான நூல்களாகும் .
இராம என்றால் ஒளி , அயனம் என்றால் வழி. அதாவது இராமாயணம் என்றால் ஒளிமயமான வழி என்று பொருள். சமஸ்கிருதத்தில் வால்மீகி எழுதிய மூல இராமாயணம் ஏழு காண்டங்களில் 24000 சுலோகங்களில் அமைந்திருக்கிறது .
இதனையே தமிழில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் 11000 பாடல்களில் பெரும்காப்பியமாக செய்து இருக்கிறார். இவை தவிர மொத்தம் 120 வகையான இராமாயண நூல்கள் பல்வேறு சிறந்த புலவர்கள் மற்றும் ரிஷிகளால் எழுதப்பட்டுள்ளன.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் எந்த இராமாயணத்திலும் யாரும் இராமரின் குழந்தைப் பருவத்தைப் பாடியதாக இல்லை. வால்மீகி இராமாயணத்தில் கூட பால காண்டத்திலேயே விசுவாமித்திரர் வருகை வந்து விடுகிறது. கம்பராமாயணத்திலும் கம்பர் குழந்தை இராமரைப் பற்றி இந்தச் செய்தியும் சொல்லவில்லை.
அப்படியானால் குழந்தை இராமரைப் பற்றி யாருமே படவில்லையா ?
இராமாயணத்தில் தான் இல்லையே ஒழிய திருப்புகழில் அருணகிரிநாதர் குழந்தை இராமரைக் கோசலை கொஞ்சுவதாக பாடி இருக்கிறார்.
ஆச்சரியமாக இருக்கிறதா ? இதோ அந்தத் திருப்புகழையே பார்த்து விடுவோம்.
எந்தை வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக …… அபிராம
இங்கு வருக அரசே வருகமுலை
யுண்க வருக மலர்சூ டிடவருக
என்று பரிவி னொடுகோ சலைபுகல …… வருமாயன்
சிந்தை மகிழு மருகா
இப்படி “தொந்தி சரிய” என்று தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழில் தான் கோசலை வாயிலாக குழந்தை இராமரை ஒரு பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் வருகை பருவத்தில் வரும் பாடல் போல் அருணகிரி நாதர் பாடியிருக்கிறார் .
பாடலுக்கான விளக்கத்தைப் பார்க்கலாம் .
எந்தை வருக ரகுநாயக வருக … என் அப்பனே வா,ரகுநாயகனே வா,
மைந்த வருக மகனே இனி வருக … குழந்தாய் வா, மகனே இதோ வா,
என்கண் வருக எனது ஆருயிர் வருக … என் கண்ணே வா, என்ஆருயிரே வா,
அபிராம இங்கு வருக அரசே வருக … அழகிய ராமனே வா, இங்கேவா, அரசே வா,
முலையுண்க வருக மலர்சூடிட வருக … பால் குடிக்க வா, பூ முடிக்க வா,
என்று பரிவினொடு கோசலை புகல … என்றெல்லாம் அன்போடு
கோசலை கூறி அழைக்க
வருமாயன் சிந்தை மகிழு மருகா … வந்த மாயன் திருமால் மனம்மகிழும் மருமகனே,
இதில் பாருங்கள் கோசலை பத்து முறை ஸ்ரீ இராமரை வருக வருக என்று அழைத்திருப்பாள் .
என்ன காரணம் தெரியுமா?
ஸ்ரீ மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் என்ற கணக்கில் தான் .
இந்த ஒரு திருப்புகழைப் பரிவோடு பாடினாலே அந்த திருச்செந்தூர் முருகன் மட்டுமில்லை, ஸ்ரீஇராமரும் நமக்கு எல்லா வளங்களையும் வாரி வாரி வழங்குவார் .