பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 8.5 கோடி விவசாயிகளுக்கான 14 வது தவணை தொகை ரூ. 17,000 கோடி நிதியை வழங்கினார். மேலும் புதிதாக 5 மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்தார்.
விவசாயிகளுக்குப் பயனளிக்கும், 1.25 லட்சம் பிரதமரின் கிசான் சம்ரிதி கேந்திரா (PMKSK ) எனப்படும் பிரதமரின் விவசாயிகள் வள மையங்களைப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
புதிதாக 5 மருத்துவக் கல்லூரிகள்
சித்தோர்கர், தோல்பூர், சிரோஹி, சிகார் மற்றும் ஸ்ரீ கங்காநகர் ஆகிய இடங்களில் ஐந்து புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதோடு, பரண், பூண்டி, கரௌலி, ஜுன்ஜுனு, சவாய் மாதோபூர், ஜெய்சால்மர் மற்றும் டோங்க் ஆகிய இடங்களில் ஏழு மருத்துவக் கல்லூரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
5 மருத்துவக் கல்லூரிகள் ரூ. 1400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன. அடிக்கல் நாட்டப்பட்ட ஏழு மருத்துவக் கல்லூரிகள் ரூ. 2275 கோடி செலவில் கட்டப்படவுள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தில், 2014 ஆம் ஆண்டு வரை, 10 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. மத்திய அரசின் முயற்சியால், மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 35 ஆக உயர்ந்துள்ளது.
இது 250 சதவீத உயர்வாகும். மாநிலத்தில் 2013-14 ஆம் ஆண்டில் 1750 இடங்களாக எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை இருந்தது. 12 புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதன் மூலம் ராஜஸ்தானில் எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 6275 ஆக உயரும். இது 258 சதவீத உயர்வாகும்.
மேலும் உதய்பூர், பன்ஸ்வாரா, பர்தாப்கர் மற்றும் துங்கர்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஆறு ஏகலவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜோத்பூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா திவ்ரி எனப்படும் சிறப்பு மையத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக விவசாயிகளின் நலன் குறித்து பல முடிவுகளை எடுத்து,
திட்டங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரசு விவசாயிகளின் தோளோடு தோல்நிற்கிறது, விவசாயிகளுக்கான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது எனப் பிரதமர் நரேந்திர மோடி கூட்டத்தில் உரையாற்றினார்.