வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் சகதிகாந்த தாஸ் அறிவிப்பு.
குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் 6.5 சதவீதமாகவே நீடிக்கும் என்றும் வங்கிகளின் கடன்களுக்காக வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறுகிய கால கடன்களுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதமே ரெப்போ வட்டி விகிதம் ஆகும். வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறுகிய கால மற்றும் நீண்டகால கடன்களை பெறுகின்றன. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கான கடன் விகிதத்தில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், “இந்தியாவில், கடந்த நிதியாண்டை விட, 2023ம் ஆண்டு மார்ச் – ஏப்ரல் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 6.7 சதவீதமாக இருந்தது. இருந்த போதிலும், மொத்த பணவீக்கம் அதன் இலக்கை விட அதிகமாகவே இருக்கிறது. எங்களின் கணிப்புப்படி, அது அப்படியே இருக்கும் மற்றும் 2023 – 24 நிதியாண்டில் 4 சதவீதத்திற்கும் அதிகமாக தொடரும்.
பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது மற்றும் முந்தைய கணிப்புகளை எல்லாம் தாண்டியுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2022-23 ஆண்டில் 7.2 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டின் 7 சதவீதத்தை விட வலுவாக உள்ளது. தொற்றுக்கு முந்தைய அளவை விட 10.1 சதவீதம் தாண்டியிருக்கிறது. இந்த அனைத்து விஷயங்களையும் கணக்கில் கொண்டு 2023-24 ம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு இந்த வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.