நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்றும் தொடர்கிறது.
இத்தீர்மானத்தின் மீது முதல் 2 நாட்கள் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் பேசினர். அந்த வகையில், கடந்த 8-ம் தேதி பேசிய தி.மு.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.
இன்று காலை,நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய மதிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மதுரை எய்ம்ஸ் விவகாரம் குறித்து பேசிய தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவுக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்குக் 1,977 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில், ஜப்பானைச் சேர்ந்த ஜெய்க்கா நிறுவனம் 1,627 கோடி ரூபாய் கடன் வழங்குகிறது.
இது மத்திய அரசு திட்டம் என்பதால், இக்கடன் தொகை முழுவதையும் மத்திய அரசே ஏற்கும். தமிழக அரசுக்கு எந்த கடன் சுமையும் இல்லை. ஆகவே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தி.மு.க.வினர் பொய்யான தகவலைப் பரப்ப வேண்டாம். அதேபோல, பொதுவாக எல்லா எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் 750 படுக்கை வசதிகள் மட்டுமே இருக்கும். ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 900 படுக்கை வசதிகள் இருக்கும். இங்கு தொற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வார்டுகள் கட்டப்படுவதால், கூடுதலாக 150 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.
அதேபோல, மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. இங்கு 99 மாணவர்கள் படிக்கிறார்கள். மேலும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தாமதமானதற்கு தமிழக அரசே காரணம். நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாகவே, கட்டுமானப் பணியைக் குறிப்பிட்ட காலத்தில் தொடங்க முடியாமல் போனது” என்று கூறினார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிக்கொண்டிருக்கும்போது, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், “பொய் பொய், மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டப்படும்” என்று கோஷமிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த நிர்மலா சீதாராமன், “யார் பொய் பேசுவது. வெட்கமாக இல்லையா” என்று ஆவேசமாகக் கூறினார். உடனே, தி.மு.க. உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேறினர். எனினும் விடாத நிர்மலா சீதாராமன், “நான் இன்னும் தமிழ்நாடு பற்றி நிறைய பேசவேண்டி இருக்கிறது. ஆகவே, ஓடாதீங்க நில்லுங்க. அப்படியே வெளியே போனாலும், தொலைக்காட்சியில் கண்டிப்பாக பாருங்கள்” என்று உரத்த குரலில் கூறினார்.