பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய பொருளாதாரக் கொள்கைகளால், இந்திய பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “2013-ம் ஆண்டு வெளியான மோர்கன் ஸ்டான்லி அறிக்கையில், உலகின் 5 பலவீனமான பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றிருந்தது.
ஆனால், 2014-ம் ஆண்டு பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றப் பின்,முற்றிலும் புதிய பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடித்தார். இதன் பயனாக கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இதன் மூலம் இந்தியா தற்போது உலக அளவில் 5-வது பெரிய பொருளாதார நாடாகத் திகழ்ந்து வருகிறது. இப்போது , அதே மோர்கன் ஸ்டான்லி அறிக்கையில் இந்தியாவுக்கு அதிக மதிப்பீட்டை வழங்கி இருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. தற்போது மோடி ஆட்சியில் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக, ஜன்தன் யோஜனா டிஜிட்டல் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால், வருமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கிறது.
மேலும், முந்தைய ஆட்சியில் மின்சாரம், குடிநீர், விமான நிலையம், நெடுஞ்சாலைகள் என வெறும் வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்து வந்தார்கள். ஆனால், மோடி ஆட்சியில்தான் இவை அனைத்தும் நடைமுறைக்கு வந்தன. காரணம், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதில் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியுடன் இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் வைப்பதற்காக வழங்கப்பட்ட செங்கோலைக், கைத்தடியாகப் பயன்படுத்தி, தமிழர்களை அவமானப்படுத்தி வந்தார் நேரு. ஆனால், இன்று அந்த செங்கோல் எங்கு இருக்க வேண்டுமோ, அங்கு வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும், காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இருக்கும் ஆழமான தொடர்பையும் வெளிப்படுத்தும் வகையிலும், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை மோடி நடத்திக் காட்டினார்.
ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய மோடி, தமிழை மேற்கோள் காட்டி பேசினார். மேலும், மனதின் குரல் நிகழ்ச்சியில் தவறாமல் தமிழைப் பயன்படுத்தி வருகிறார். சுருக்கமாகச் சொன்னால், சிலப்பதிகார வழியில் பிரதமர் மோடி ஆட்சியை நடத்தி வருகிறார். சிலப்பதிகாரத்தில் தமிழர்கள் என்றுதான் சொல்லப்படுகிறதே தவிர, திராவிடர்கள் என்று சொல்லப்படவில்லை.
இந்தி, சமஸ்கிருதத்தை நாங்கள் கற்றுக்கொள்ளக் கூடாது என்கிற திணிப்பு தமிழ்நாட்டில் இருந்தது. தமிழை வளர்க்க வேண்டும் என்பதற்காக இந்தியை வளரவிடக் கூடாது என்கிற ஆணவத்துடன் தனிநபர்கள் செயல்பட்டு, இந்தியையும், சமஸ்கிருதத்தையும் கற்றுக்கொள்ள விடாமல் எங்களைத் தடுத்து விட்டீர்கள் ஆனால் நீங்கள் தமிழையும் வளர்க்கவில்லை.
மணிப்பூர் மட்டுமல்ல, டெல்லி, ராஜஸ்தான் என பல்வேறு மாநிலங்களிலும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதைக் கண்டிப்பாக தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதேசமயம், இதில் அரசியல் செய்யக் கூடாது. 1989-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ஆம் தேதி, தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்து இழுத்த சம்பவத்தை இந்த அவைக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
அப்போது, முதல்வராகாமல் இந்த அவைக்கு வரமாட்டேன், என்று சபதம் செய்துவிட்டுச் சென்றவர், சொன்னதுபோலவே 2 ஆண்டுகள் கழித்து முதல்வராக அதே அவைக்கு வந்தார். அப்படி இருக்கையில், தி.மு.க.வினர் திரௌபதி குறித்து பேசுகிறார்கள். ஜெயலலிதா சேலையைப் பிடித்து இழுத்ததைத் தி.மு.க.வினர் மறந்து விட்டார்களா?
எல்லாவற்றுக்கும் மேலாக, ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லி முந்தைய காங்கிரஸ் அரசு தடை விதித்தது. அந்தக் கூட்டணியில் தி.மு.க.வும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகுதான், ஜல்லிக்கட்டு தடை நீக்கப்பட்டது. ஆகவே, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் யாரும் நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்” என்று தி.மு.க.வை மிக கடுமையாக விமர்சனம் செய்தார்.