எதிர்க்கட்சிகள் இந்தியாவையும் பிரித்து விட்டன. தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் இந்தியா என்றால் வடநாடு. தமிழ்நாடு தனி நாடு என்கிறார் என்று தி.மு.க.வை கடுமையாக விமர்சித்திருக்கிறார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.
மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பாரதப் பிரதமர் மோடி பேசுகையில், “எதிர்க்கட்சிகள் இந்தியாவைத் துண்டு துண்டாகப் பிரித்து விட்டன. தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு அமைச்சர் இந்தியா என்றால் தெரியாது என்கிறார். தமிழ்நாடு தனிநாடு என்று கூறியிருக்கிறார். தி.மு.க.வைப் பொறுத்தவரை தமிழ்நாடு இந்தியாவில் இல்லை போல.
தமிழ்நாடு இராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர்., அப்துல்கலாம் போன்ற தேசப்பக்தி கொண்ட தலைவர்களைக் கொடுத்த மண். இப்படி பெரிய பெரிய தலைவர்களை எல்லாம் கொடுத்த தமிழ்நாடு, இப்படிப்பட்ட அமைச்சர்களையும் கொடுத்திருக்கிறது” என்று கூறினார்.
அதேபோல, விருதுநகர் பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்த பாரத மாத சிலையை தமிழக காவல்துறை நேற்று முன்தினம் அகற்றியது. இதைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, “தமிழ்நாட்டில் பாரத மாதவுக்கு பூஜை செய்வது முற்றுலுமாக தடுக்கப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார். இது தவிர, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
இதை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, “தமிழக முதல்வர் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கடிதம் எழுதி இருக்கிறார். இந்திரா காந்தி ஆட்சியில்தான் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. நமக்குச் சொந்தமான இடத்தை வேறு நாட்டிற்கு ஒப்படைத்தவர்கள் யார்?” என்று கேள்வி எழுப்பினார்.