அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில், லைஹானா சுற்றுலாத் தலம் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இத்தீவிபத்தில் 53 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் நகரை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். மேலும், 270-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமான சோகம் அரங்கேறி இருக்கிறது.
அமெரிக்காவின் ஹவாய் மாகாணம் தீவுகள் நிறைந்தது. பசிபிக் கடலில் இருந்து 2,000 மைல் தொலைவில் அமைந்திருக்கும் இம்மாகாணத்தில் 8 தீவு நகரங்கள் இருக்கின்றன. இந்நகரங்களில் 2-வது பெரிய தீவு நகரம் மாய், இங்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு காட்டுத் தீ பரவியது. காற்றின் வேகத்தால் அருகிலுள்ள நகரங்களுக்கும் தீ பரவியது. குறிப்பாக, புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான லைஹானா நகரில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், கட்டடங்கள் முழுவதும் தீக்கிரையானது.
இதனால், எங்கு பார்த்தாலும் தீப்பிழம்பாக காட்சியளித்தது. வானுயர எழுந்த கரும்புகையால் மாய் நகரமே புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
குறிப்பாக, சுற்றுலாத் தலமான லைஹானா நகரம் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இத்தீயில் பலரும் உடல் கருகி உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர். மேலும், தீயிலிருந்து தப்பிக்க கடலில் குதித்தவர்களில் பலர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, தீயணைப்பு வீரர்களும், அமெரிக்க விமானப்படையினரும், கடற்படையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். எனினும், காட்டுத் தீ என்பதால், காற்றின் வேகம் அதிகம் இருந்ததாலும், தீயை அணைப்பதில் பெரும் சவால் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், தீயை அணைக்கப் போராடி வருகிறார்கள். தீ விபத்து காரணமாக, மாய் தீவின் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டிருப்தோடு, இணையதளச் சேவையும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
தீவிபத்தில் இதுவரை 53 பேர் பலியாகி இருப்பதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 270-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானதோடு, ஏராளமான வீடுகள் பலத்த சேதமடைந்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிப்பதாகவும், இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாய் தீவுக்கும், லைஹானா நகருக்கும் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணிகள் தங்களது நாட்டுக்கு திரும்புவதற்காக விமான நிலையங்களுக்கு விரைந்தனர். ஆனால், காட்டுத்தீயால் விமான சேவையும் நிறுத்தப்பட்டிருப்பதால் விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் காத்துக் கிடக்கின்றனர். தீவை விட்டு வெளியேறும் வரை ஆயிரக்கணக்கான மக்களுக்கு அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் அடைக்கலம் கொடுத்திருக்கிறது.
இதனிடையே, மாய் தீவில் அவசர நிலைப் பிரகடணம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஹவாய் தீவில் ஏற்பட்டிருக்கும் காட்டுத்தீயை பேரழிவு என்று அறிவித்திருக்கிறார். தவிர, மீட்புப் பணியில் இராணுவம் ஈடுபடும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.