மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் வகையில், இந்தியத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பெயரில், ஒரு அசாதாரண அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியத் தலைமை நீதிபதியாக இருப்பவர் டி.ஒய்.சந்திரசூட். இவரது பெயரில் சமூக வலைத்தளங்களில் இன்று ஒரு பதிவு வைரலாகி வருகிறது. இந்திய ஜனநாயகம், உச்ச நீதிமன்றம் ஜிந்தாபாத் என்று தொடங்கும் அப்பதிவில், “இந்திய அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். ஆனால், இதற்கு மக்களாகிய உங்களது ஒத்துழைப்பு மிகவும் முக்கியம்.
ஆகவே, மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அரசிடம் உரிமைகளைக் கேட்டு வீதியில் இறங்கிப் போராடுங்கள். இந்தச் சர்வாதிகார அரசு, மக்களைப் பயமுறுத்தும், அச்சுறுத்தும். ஆனால், நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம். தைரியமாக அரசிடம் கணக்குக் கேளுங்கள். தவறைத் தட்டிக் கேளுங்கள். உங்களுடன் நான் இருக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அந்தப் பதிவில், தலைமை நீதிபதி சந்திரசூட்டின் புகைப்படமும் இடம்பெற்றிருக்கிறது. இப்பதிவு ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வாட்ஸ் ஆப்பில் பகிரப்பட்டு வருகிறது. எனினும், இது போலியான பதிவு என்றும், இப்படியொரு பதிவை தலைமை நீதிபதி வெளியிடவில்லை என்றும், உச்ச நீதிமன்றத்தின் பொதுச்செயலாளர் அதுல் குர்ஹேகர் மற்றும் இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் மறுப்புத் தெரிவித்திருக்கின்றனர்.
இதுகுறித்து பேசிய துஷார் மேத்தா, “இது ஒரு போலியான பதிவு. எந்த தலைமை நீதிபதியும், மத்திய அரசுக்கு எதிராக இதுபோன்றதொரு செயலை செய்ய மாட்டார்கள். அதிலும், தலைமை நீதிபதி சந்திரசூட் மிகவும் புத்திசாலி. ஆகவே, இப்படியொரு செயலை அவர் செய்திருக்க மாட்டார். தவிர, நீதியரசரின் பெயரால் இப்படியொரு பதிவை வெளியிட்டிருக்கும் நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.