செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கை விசாரிக்க மறுத்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி இளங்கோவன் விலகி இருக்கிறார். வேறு நீதிபதிக்கு மாற்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
தி.மு.க. அரசில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வருபவர் செந்தில் பாலாஜி. தற்போது, சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இவர், கடந்த 2011 – 16 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏராளமானோரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, டெல்லி உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மறுவிசாரணை நடந்து வருகிறது. பண மோசடி தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், சொத்துக் குவிப்பு மற்றும் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக வருமான வரித்துறையினரும், அமலாக்கத்துறையினரும் தனித் தனியாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக, கடந்த மே மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது, செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி வீட்டுக்கு சோதனைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களும், தி.மு.க.வினரும் தாக்குதல் நடத்தியதோடு, அதிகாரிகள் சென்ற காரின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர். இதில் காயமடைந்த அதிகாரிகள், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்து வருகிறது. இவ்வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணை வந்தது. ஆனால், மேற்கண்ட வழக்கை விசாரிக்க மறுத்துவிட்ட நீதிபதி இளங்கோவன், இவ்வழக்கிலிருந்தும் விலகி இருக்கிறார். இதையடுத்து, இவ்வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றப் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.