இந்தியா தனது 77-வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடியது. இதையொட்டி, கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த டூடுல் இந்திய நாட்டின் புடவை உடுத்தும் கலாச்சாரத்தை தாங்கிப் பிடிக்கும் வகையிலும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் ஜவுளி வகைகளின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது.
வழக்கமாக பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இன்று இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், புடவை டூடுலை வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது.
இதுகுறித்து மேற்கண்ட டூடுளை வடிவமைத்திருக்கும் டெல்லியைச் சேர்த்த ஓவியர் நர்மதா குமார் கூறுகையில், “இந்தியாவின் ஜவுளி மற்றும் தேச அடையாளத்தின் ஆழமான தொடர்பைக் கௌரவிப்பதும், கொண்டாடுவதும் மிக முக்கியமான குறிக்கோளாக இருந்தது. இந்தக் கலைப் படைப்பின் மூலம், இந்தியாவின் ஜவுளி மரபுகளின் செழுமையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் கலைப் புத்திசாலித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட, கூகுள் டூடுல் மூலம் பார்வையாளர்களிடம் தெரிவிக்க முடியும் என்பதே எனது நம்பிக்கை” என்று தெரிவித்தார்.
மேலும், இந்த டூடுலில் தமிழ்நாட்டின் சிறப்பை வெளிப்படுத்தும் நோக்கில் கஞ்சிபுரம் பட்டுப்புடவை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.